டெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் நிதி பற்றாக்குறை குறித்து எடுத்துரைத்து தமிழகத்திற்கு தேவையை நிதி ஆதாரங்களை திரட்டுவார் என திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
தாம்பரம் அடுத்த புனித தோமையார் மலை ஊராட்சி ஒன்றியம் முடிச்சூர் ஊராட்சியில் 75 வந்து சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது ஊராட்சி பகுதிகளில் செய்யப்பட்ட வளர்ச்சி பணிகள், செய்யப்பட உள்ள பணிகள் குறித்து கேட்டறிந்து அவற்றை விரைவாக முடிக்க உறுதி அளித்தனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர்பாலு, சென்னையில் மழைக்காலம் வருவதற்கு முன்பு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படும். முதலில் மழை பாதிப்புகள் இந்த ஆண்டு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளோம்.

டெல்லி வரும் தமிழக முதலமைச்சர் 17ம் தேதி பிரதமரை சந்திக்கின்றார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் ஆகியோரை சந்திந்து வாழ்த்துக்களை தெரிவிக்கவிருக்கிறார். அதேபோல பிரதமரை சந்தித்து தமிழ்நாடு திட்டங்கள் குறித்து பேச உள்ளார்.
இதையும் படியுங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்
இந்த சந்திப்பின்போது நிதி பற்றாக்குறை குறித்து பிரதமரிடம் எடுத்துரைத்து திட்டங்களை விரைவாக முடித்து தர கோரிக்கை விடுப்பார். குடியரசு தலைவர் அலுவலகத்திற்கு தமிழகத்தில் இருந்து பல்வேறு திட்டங்கள் குறித்து ஆவணங்கள் அனுப்பப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 21 ஒப்புதல்கள் தொடர்பாகவும், நீட்தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிப்பது தொடர்பாகவும் கோரிக்கை மனு அளிக்கவுள்ளார்.
நிதியமைச்சர் வாகனத்தின் மீது செருப்பு வீசிய சம்பவம் குறித்த கேள்விக்கு, இந்த சம்பவத்திற்கு பாஜகவினர் மன்னிப்பு கூறியுள்ளனர். தேசியக்கொடி இருப்பதைக் கூட பொருட்படுத்தாமல் அதன் அருகே செருப்பை தூக்கி வீசிய சம்பவம் தேசிய கொடியை அவமதிக்கும் செயல் என்பதை பாஜகவினர் தான் உணர வேண்டும் என அவர் கூறினார்.







