சிறையில் இம்ரான்கான் தனக்கு அளிக்கப்பட்டுள்ள வசதிகள் திருப்தி அளிப்பதாக தெரிவித்துள்ளார் என சிறைத்துறை தலைமை ஆய்வாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பாகிஸ்தானின் 2018-ஆம் ஆண்டு இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது வெளிநாட்டுப் பயணத்தின் போது பரிசாக பெற்ற பொருட்களை, அரசு கருவூலத்தில் சேர்க்காமல், தனது சொந்த கணக்கில் சேர்த்தது, பாகிஸ்தானில் தேர்தல் பிரச்சாரத்தின் போது காவல்துறை, நீதித் துறையைச் சேர்ந்தவர்களுக்கு மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட 9 வழக்குகள் இம்ரான் கான் மீது உள்ளது.
இந்த வழக்குகள் தொடர்பாக நடைபெற்ற விசாரணையின் முடிவில், குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டதால், இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் அவர் 5 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் உருவானது. மேலும், இம்ரான்கானின் எம்.பி. பதவியும் பறிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பு வெளியான தினமே அவர் பாகிஸ்தானின் பஞ்சாப் பிராந்தியத்தில் உள்ள அட்டாக் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அடிப்படை வசதிகள் கூட மறுக்கப்பட்டு வந்ததாக அவரது குடும்பத்தினரும், அவரது கட்சியை சேர்ந்த ஆதரவாளர்களும் தொடர்ந்து கூறி வந்தனர். இந்நிலையில் சிறைத்துறை தலைமை ஆய்வாளர் மியான் ஃபரூக் நசீர் அங்கு சென்று நேரில் ஆய்வு செய்து, இம்ரான்கானுக்கு அளிக்கப்பட்டிருக்கும் வசதிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அந்த அறிக்கையில்:
”இம்ரான் கானில் தனிமைக்கு இடையூறு இல்லாத வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் படுக்கை, தலையணை, நாற்காலி, ஏர் கூலர், பேன், குரான் புத்தகங்கள், செய்தித்தாள், தொலைக்காட்சி ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. அதைத்தவிர அவரது உணவுப் பட்டியலில், காலை உணவாக ரொட்டி, ஆம்லெட், தயிர், தேநீர் மதிய மற்றும் இரவு உணவிற்கு பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், அரிசி உணவு வழங்கப்படுகிறது.
மேலும், அவரது விருப்பப்படி வாரத்திற்கு இருமுறை சிக்கன், நெய்யில் சமைத்த ஆட்டிறைச்சி வழங்கப்பட்டு வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது உடல் நலனை காக்க 5 மருத்துவர்கள் சுழற்சி முறையில் பணியில் உள்ளனர். வாரத்திற்கு இருமுறை அதாவது செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் 2 முதல் 3 மணி நேரம் குடும்பத்தினர் அவரை சந்தித்துப் பேசவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இம்ரான்கான் தனக்கு அளிக்கப்பட்டுள்ள வசதிகள் திருப்தி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.” இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.







