மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் நடைபெற உள்ள இடத்தில் முன்னேற்பாடு பணிகள் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்திய வரலாற்றில் முதல் முறையாக 187 நாடுகள் பங்கேற்கின்ற 44வது சர்வதேச செஸ்
ஒலிம்பியாட் போட்டி செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி
பகுதியில் உள்ள ஃபோர் பாய்ண்ட் தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற உள்ளது.
மாமல்லபுரத்தில் நடைபெறும் ஒலிம்பியாட் போட்டிக்காக சுமார் 52 ஆயிரம் சதுர அடி
பரப்பில் சர்வதேச தரத்திலான அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே 22 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் உள்ள அரங்கில் 200 விளையாட்டு வீரர்களும் தற்போது அமைக்கப்பட்டு வரும் அரங்கில் 500 விளையாட்டு வீரர்களும் ஒரே நாளில் 700
விளையாட்டு வீரர்கள் பங்கு பெற்று விளையாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு
வருகிறது.
இம்மாதம் 28ம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வரை நடைபெறும் இந்தப்
போட்டியில் 227 அணிகளைச் சேர்ந்த சுமார் 2000க்கும் மேற்பட்ட வீரர்கள் இந்த
போட்டியில் பங்கேற்க உள்ளனர். இந்த முன்னேற்பாடு பணிகள் குறித்து அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார். ஆய்வின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குதிரை காயினை எடுத்து நகர்த்தி விளையாடினார்.
அதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ. அன்பரசன், மெய்யநாதன், மதிவேந்தன் மற்றும் ஆ.ராசா உள்ளிட்டோர் அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் ஆய்வு மேற்கொண்டனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டி அளித்த விளையாட்டு துறை அமைச்சர் மெய்ய நாதன், வரும் 28ம் தேதி போட்டிகள் தொடங்க உள்ளது 80 சதவீத பணிகள் முடிவுற்ற நிலையில் இருபதாம் தேதிக்குள் அனைத்து பணிகளும் விரைந்து முடிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.








