ஹரியானாவில் நடைபெற்ற யூத் கேம் சாம்பியன்ஷிப் தொடரில் சென்னையில் இருந்து பங்கேற்ற 30-க்கும் மேற்பட்ட சிலம்ப வீரர், வீரங்கனைகள் 15 தங்கம் உட்பட பல பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
ஹரியானா மாநிலத்தில் கடந்த ஜூன் 5ஆம் தேதி யூத் கேம்ஸ் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா சார்பில், இந்தாண்டுக்கான யூத் கேம் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றது. இதில், சிலம்பப் போட்டியில் மாநில அளவில் தேர்ச்சி பெற்று தேசிய போட்டிக்கு தகுதி பெற்ற சென்னையை சேர்ந்த சிலம்ப வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். அவர்கள் யூத் கேம் சாம்பியன்ஷிப் போட்டியில் 15 தங்கம், 8 சில்வர், 5 வெண்கலம் உள்ளிட்ட பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
இந்த வெற்றி குறித்து நியூஸ்7 தமிழுக்கு பேட்டியளித்த சிலம்பாட்ட பயிற்சியாளர் காளிங்கன், மாநில அளவில் பயிற்சி பெற்று தேர்ச்சியான சிலம்பாட்ட வீரர்களுக்கு ஹரியானாவில் தேசிய அளவிலான யூத் கேம்ஸ் போட்டி நடைபெற்றது என்றார். இதில் சென்னையில் இருந்து முப்பதுக்கும் மேற்பட்ட சிலம்பாட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டதாகவும், இதில் 27 பேர் பதக்கங்களை வென்றுள்ளனர் என தெரிவித்தார். சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நாடு முழுவதும் பங்கேற்ற நிலையில் தமிழ்நாட்டில் இருந்து சென்றார்கள் 15 தங்கப் பதக்கங்களை சிலம்பாட்டப் போட்டியில் வென்று சாதனை படைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
– இரா.நம்பிராஜன்








