ரயில் விபத்தில் சிக்கியவர்களின் உறவினர்களுக்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஒடிசாவுக்கு சிறப்பு ரயில் புறப்பட்டது.
கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. இந்த ரயில் மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய நான்கு மாநிலங்களின் இணைக்கும் விதமாக இதன் வழித்தடம் அமைந்துள்ளது.
இந்த நிலையில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் நேற்று மாலை 3:30 வழக்கம் போல மேற்கு வங்க மாநிலம் சாலிமரிலிருந்து புறப்பட்டது. இந்த ரயில் இன்று மாலை 4:50க்கு சென்னை வந்து சேரும் என எதிர்பார்க்கப்பட்டது.
நேற்று மாலை இந்த ரயில் மேற்கு வங்க மாநிலத்தை கடந்து ஒடிசாவின் பஹனகா ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருக்கும் போது சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின்போது ரயில் நேருக்கு நேர் மோதியதில் ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டன. அப்போது பெங்களூருவில் இருந்து ஹவுரா சென்ற ரயில் தடம்புரண்டு கிடந்த பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளாகியது.
இந்த கோர விபத்தில் பகல் 2 மணி நிலவரப்படி 288 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் 900பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கிட்டத்தட்ட 48 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் ரயில் விபத்தில் சிக்கியவர்களின் உறவினர்களுக்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஒடிசாவுக்கு சிறப்பு ரயில் புறப்பட்டது. இந்த ரயிலில் பொதுமக்களுக்கு இலவசமாக பயணம் செய்கின்றனர். மேலும் ரயில் விபத்தில் மீட்புபணிகளில் ஈடுபட தன்னார்வலர்களும் இந்த ரயிலில் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.




