சென்னை மெட்ரோ ரயிலில் இதுவரை இல்லாத வகையில் நடப்பாண்டு ஜூன் மாதத்தில் 74.06 லட்சம் பேர் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
“சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், வெளி ஊரில் இருந்து வரும் பயணிகளுக்கும் நம்பகத் தன்மையான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது. அந்தவகையில் கடந்த மே மாதத்தைவிட ஜூன் மாதத்தில் 1,38,869 பயணிகள் கூடுதலாக பயணித்துள்ளனர்.
மெட்ரோ ரயில் சேவை தொடங்கியதில் இருந்து நடப்பாண்டு ஜூன் மாத பயணிகளின் எண்ணிக்கையே அதிகமாகும். ஜனவரியில் 66,07,458, பிப்ரவரியில் 63,69,282, மார்ச் மாதத்தில் 69,99,341, ஏப்ரல் மாதத்தில் 66,85,432, மே மாதத்தில் 72,68,007 பயணிகளும் ஜூன் மாதத்தில் அதிகபட்சமாக 74,06,876 பயணிகளும் பயணம் செய்துள்ளனர். ஜூன் மாதத்தில் ஜூன் 28 அன்று அதிகபட்சமாக 2,95,509 பேர் பயணித்துள்ளனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023, ஜூன் மாதத்தில் மட்டும் க்யுஆர் குறியீடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 25,15,727 பயணிகள், பயண அட்டைகளை பயன்படுத்தி 44,81,995 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 3,98,131 பயணிகள், குழு பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 5,085 பயணிகள் மற்றும் சிங்காரா சென்னை அட்டையை பயன்படுத்தி 5,938 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.”
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.







