மதம் மாறியவருக்கு கலப்பு திருமண சான்று வழங்க உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கிறிஸ்தவ ஆதி திராவிடர் வகுப்பை சேர்ந்த பால்ராஜ் என்பவர் அருந்ததியர் இனத்தை சேர்ந்த அமுதா என்பவரை மணமுடித்தார். கிறிஸ்தவ ஆதி திராவிடர் என்பதால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என சாதிச் சான்று பெற்ற அவர், தனக்கு கலப்பு மணம் புரிந்தவர்களுக்கான சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்திருந்தார். அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை அடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கலப்பு மண சான்றிதழ் வழங்க உத்தரவிடக்கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, 1997ஆம் ஆண்டு அரசாணைப்படி மத மாறிய நபர்களுக்கு கலப்பு மண சான்றிதழ் வழங்க முடியாது என்பதால் மனுதாரரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. பின்பு வழக்கை விசாரித்த நீதிபதி, மதம் மாறியவருக்கு கலப்பு மண சான்றிதழ் வழங்கினால், கலப்பு திருமணம் புரிந்தவர்களுக்கான சலுகைகள் தவறாக பயன்படுத்தக் கூடும் என தெரிவித்தார். எனவே, மதம் மாறியவருக்கு கலப்பு மண சான்று வழங்க உத்தரவிட முடியாது எனக்கூறிய நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து ஆணையிட்டார்.







