14 மாதங்களுக்கு பிறகு மீண்டும் சென்னை கடற்கரை – வேளச்சேரி பறக்கும் ரயில் சேவை துவக்கம்!

சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையேயான பறக்கும் ரயில் சேவை 14 மாதங்களுக்குப் பிறகு இன்று மீண்டும் தொடங்கியது. சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 3 வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில்…

சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையேயான பறக்கும் ரயில் சேவை 14 மாதங்களுக்குப் பிறகு இன்று மீண்டும் தொடங்கியது.

சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 3 வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் 2 வழித்தடங்களில் மின்சார ரயில்களும், ஒரு வழித்தடத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்களும் இயக்கப்படுகின்றன. இதனால் தாம்பரம் சந்திப்பு மற்றும் தென் மாவட்டங்களை நோக்கிச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்கள் கடற்கரை – எழும்பூர் இடையே செல்லும் போது அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.

இதற்கு தீர்வு காணும் வகையில் 4½ கி.மீ தொலைவுக்கு ரூ.279 கோடி மதிப்பீட்டில் கடற்கரை – எழும்பூர் இடையே 4-வது வழித்தடம் அமைக்கும் பணிக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. இதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 27 ஆம் தேதி 4-வது வழித்தடம் அமைக்கும் பணி தொடங்கியது. இந்த பணிகள் காரணமாக சென்னை கடற்கரை- வேளச்சேரி இடையே இயக்கப்படும் பறக்கும் ரயில்கள் சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து இயக்கப்பட்டன. இதனால், பறக்கும் ரயிலை பயன்படுத்தி வந்த பயணிகள் கடும் பாதிப்புக்குள்ளாகினர்.

இந்நிலையில் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, இன்று காலை முதல் பறக்கும் ரயில்கள் வழக்கம் போல் இயங்கத் தொடங்கின. கடற்கரை – வேளச்சேரி வரை காலை 4.53 முதல் இரவு 11.13 வரை 25 நிமிட இடைவேளையில் 45 ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதேபோல் மறுமார்க்கமாக வேளச்சேரி – கடற்கரை வரை காலை 4 முதல் இரவு 10.20 வரை 25 நிமிட இடைவேளையில் 45 ரெயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

அதேநேரம் சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் சேவை, மீண்டும் தொடங்கியுள்ள நிலையிலும், பூங்கா ரயில் நிலையத்தில் மறு அறிவிப்பு வரும் வரை ரயில்கள் நிற்காது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது வேளச்சேரியில் இருந்து வரும் ரயில்களும், கடற்கரையில் இருந்து வேளச்சேரி நோக்கி செல்லும் ரயில்களும் பூங்கா நகர் ரயில் நிலையத்தில் நிற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.