திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் தேரோட்ட விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள குணசீலம் வெங்கடாஜலபதி கோவில்
பிரம்மோற்சவ விழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு அனுதினமும் பெருமாள் ஹனுமந்த வாகனம், கருட வாகனம், சேஷ
வாகனம், யானை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு
அருள்பாலித்து வந்தார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக காலை 5:30 மணிக்கு பெருமாள் உபய நாச்சியார்களுடன் தேர்த்தட்டில்
எழுந்தருளினார். அதைத் தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க, அதிர்வேட்டுகள் ஒலிக்க 8.30 மணிக்கு தேரோட்டத்தைத் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், எம்.எல்.ஏ காடுவெட்டி
தியாகராஜன், ஊராட்சி மன்ற தலைவர் குருநாதன் உள்ளிட்டோர் தேரை வடம்பிடித்துத்
தொடங்கி வைத்தார்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா, கோவிந்தா என்ற பக்தி
கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் 100-கணக்கான பக்தர்கள் தேரின் பின்னால் பக்தி பரவசத்துடன் அங்கப்பிரதட்சணம் செய்தனர்.







