தமிழ்நாட்டில் மே 8 வரை மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழ்நாட்டில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது, “தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 3 நாள்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை நிலவும். …

தமிழ்நாட்டில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது,

“தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 3 நாள்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை நிலவும்.  அதற்கடுத்த 2 நாள்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2 செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும்.   அதேபோல் மே 5 வரை வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

மே 8 வரை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 41-43 டிகிரி செல்சியஸ்,  இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 39-40 டிகிரி செல்சியஸ், கடலோர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 36 – 38 டிகிரியும் இருக்கக்கூடும்.

மே 6 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மே 7ல் தேனி,  திண்டுக்கல்,  திருப்பூர்,  கோவை,  நீலகிரி,  ஈரோடு,  சேலம்,  தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மே 8ல் கோவை,  நீலகிரி,  தேனி,  திண்டுக்கல்,  திருப்பூர்,  விருதுநகர் மாவட்டங்கள், தென்காசி மற்றும் நெல்லை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.  சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.  மே 6 வரை தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கி.மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.  இதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.”

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.