மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்காலில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜூலை 2 முதல் 6ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜூலை 2, 5, 6ஆம் தேதிகளில் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
ஜூலை 2 முதல் 6 ஆம் தேதி வரை இலட்சத்தீவு பகுதி, கர்நாடகா – கேரளா கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஜூலை 2 முதல் 4ஆம் தேதி வரை குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஜூலை 3, 4ஆம் தேதிகளில் வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
-ம.பவித்ரா