இந்தியாவின் நைட்டிங்கேல் லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு அரசியல் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் தற்போது இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் “ மற்றவர்களைப் போல எனக்கும் லதா அவர்களின் மறைவு மனமுடையச் செய்துள்ளது. அவரது தெய்வீகக் குரல் நிரந்தரமாக ஓய்ந்துவிட்டது. ஆனால் அவரது மெல்லிசைகள் என்றும் அழியாமல் நிரந்தரமாக ஒலித்துக் கொண்டிருக்கும். அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் என் இரங்கல்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி லதா மங்கேஷ்கரின் இறப்புக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக அவரின் குடும்பத்தினரிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார் மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில் “அன்பும், அக்கறையும் கொண்ட மூத்தச் சகோதரி லதா மறைந்தார் என்ற செய்தி சொல்லொண்ணா வேதனையைத் தருகிறது.அவர் நிரப்ப முடியாத வெற்றிடத்தை விட்டுச் சென்றிருக்கிறார். வருங்கால சந்ததியினர் அவரது கலாச்சார கலை பங்களிப்பை நினைவு கூர்வார்கள். அவரது மெல்லிசை குரல் மயக்கும் இணையற்ற திறன் கொண்டது” என்று பதிவு செய்துள்ளார் .

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் லதா மங்கேஷ்கர் இறப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். பல காலங்களாக இந்தியாவின் மிகவும் பிரியமான குரலாக இருந்தார். அவரது தங்கக் குரல் அழியாதது மற்றும் அவரது ரசிகர்களின் இதயங்களில் தொடர்ந்து எதிரொலிக்கும். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டு இருந்தார்.
இன்று காலை லதா மங்கேஷ்கர் மறைந்த செய்தி கேட்டு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மருத்துவமனைக்கு விரைந்தார். பின்னர் அவரது மறைவு செய்தியை நிதின்கட்கரி உறுதி செய்து அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் “ இந்தியாவின் இசைக்குயில் லதா மங்கேஷ்கர் மறைந்த செய்தியறிந்து வருத்தமுற்றேன். பல்வேறு மொழிகளில் தனது மெல்லிய குரலில் ஒவ்வொரு இந்தியரின் இதயத்தையும் தொட்டுள்ளார் . அவரது குடும்பத்திற்கும், ரசிகர்களுக்கும் என் இரங்கல்” என்று குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி “தன் இனிய குரலால் இந்திய மக்களைக் கவர்ந்த மரியாதைக்குரிய லதா மங்கேஷ்கர் அவர்கள், மறைந்த செய்தி வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்திற்கும், அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். அவர் குரலால் நம்மிடையே எப்போதும் வாழ்வார்” எனத் தெரிவித்துள்ளார்
இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் தனது ட்விட்டர் பதிவில் அன்பும் , மரியாதையும், அஞ்சலியும். என்று குறிப்பிட்டுள்ளார்.
“அவர் பாடியது மேட்டுக்குடிக்கும் மட்டுமல்ல ரோட்டிக்குடிக்கும் தான், உழைக்கும் மக்கள் அவர் பாடல் கேட்டு தங்கள் கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருக்கிறார்கள், காதல் கொண்டிருக்கிறார்கள், தங்கள் வியர்வையைச் சுண்டி எறிந்திருக்கிறார்கள்,தங்கள் துக்கத்தை மறைந்திருக்கிறார்கள், தங்கள் மகிழ்ச்சியில் பிணைத்திருக்கிறார்கள். இந்தியர்களின் வாழ்வோடு தன்னை பிணைத்துக் கொண்ட அந்த மாபெரும் இசையரசியின் புகழ் வாழ்க” என்று வைரமுத்து தனது வீடீயோ பதிவில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
லதா மங்கேஷ்கரின் இறப்புக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் தொடர்ச்சியாக இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், அரசு சார்பில் இன்று மாலை சிவாஜி பூங்காவில் இறுதிச் சடங்கு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றும், நாளையும், அரசு சார்பில் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும் மத்திய அரசிடமிருந்து தகவல் வெளியாகியுள்ளது.









