மதுபான கொள்கை வழக்கில் சிபிஐ சம்மன் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை சுற்றி முறுக்கும் அரசியல் நெருக்கடிகளை பற்றி விரிவாக பார்க்கலாம்.
டெல்லியை தொடர்ந்து பஞ்சாப்பில் ஆளும் கட்சி, ஆம் ஆத்மிக்கு தேசிய கட்சி அங்கீகாரம் என மகிழ்ச்சியான செய்திகளை சுவைக்கும் முன்பே, கோவாவில் போலீஸ் சம்மன், மதுபான கொள்கை வழக்கில் சிபிஐ சம்மன் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை சுற்றி முறுக்கும் அரசியல் நெருக்கடிகளை பற்றி பார்க்கலாம்
எதிர்க்கட்சிகள் எல்லாம் நெல்லிக்காய் மூட்டை போல் சிதறிக்கிடக்கின்றன. இனி எல்லாம் வெற்றியே. வரும் 2024 ஆம் ஆண்டில் மக்களவை தேர்தலில் வெல்வது எளிதே. மீண்டும் வென்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கலாம் அடுத்ததாக பல செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்தலாம் என்ற கனவில் வலம் வருகிறது மோடி தலைமையிலான பாஜக அரசு. ஆனால், அரசியல் களம் சவாலாக மாறியுள்ளது. சமீபத்தில் எதிர்க்கட்சிகளிடையே ஏற்பட்ட ஒற்றுமை வியூகம் யாரும் எதிர்பாராதது. எந்த நிபுணரும் கணிக்காதது என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
புலனாய்வு அமைப்புகளை அரசியல் கட்சிகளை பழிவாங்கும் நோக்கில் ஆயுதமாக பயன்படுத்துகிறது பாஜக அரசு என குற்றம் சாட்டப்படுகிறது. பாஜக அரசு மீதான எதிர்ப்பில் முந்தி கொள்ளும், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை அலற விட, அவரது அமைச்சரவை சகாக்கள் மீது வழக்கு மற்றும் சிறை, காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் மீதான கடும் தாக்குதல், உச்ச கட்டமாக ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிப்பு, சிவசேனா வை சிக்கலில் தள்ளியது. எப்போதும் பாஜக வை அலறவிடும் தெலங்கனாவின் பாரதிய ராஷ்ட்ரிய சமிதிக்கும் சிக்கல், டெல்லி, அடுத்து பஞ்சாபிலும் பாஜக வின் ஆட்சிக்கனவை சிதைத்த ஆம் ஆத்மிக்கு குடைச்சல் என இந்த பட்டியல் நீள்கிறது.
டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் ஆளுநர் மூலம், நிழல் அரசை நடத்தியது பாஜக. மாநில அரசுகள் நீதிமன்றம் சென்று நிவாரணம் தேடி கொண்டன. ஆனாலும் பாஜக மனம் தளரவில்லை. முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசில், கடந்த 2021-22 நிதி ஆண்டில் புதிய மதுபான கொள்கை அமல்படுத்தியதில்,100 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதை உறுதியாக பிடித்து கொண்டது பாஜக.
மதுபான கொள்கை வழக்கில் முதலில் டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின், பிறகு துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ஆகியோரை அமலாக்கத் துறை கைது செய்தது. அடுத்ததாக டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் அமித் அரோரா, சவுத் குரூப் நிறுவனத்தின் அருண் ராமச்சந்திர பிள்ளை, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி. மாகுண்டா ஸ்ரீநிவாஸ் ரெட்டியின் மகன் ராகவ் மாகுண்டா, சரத் ரெட்டி, அபிஷேக், புச்சிபாபு ஆகியோர் கைதாகியுள்ளனர். தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா, அமலாக்கத் துறை விசாரணைக்கு சென்று வந்துள்ளார். எந்த நேரமும் அவர் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
புதிய திருப்பமாக டெல்லி மதுபான கொள்கை தொடர்பான வழக்கில், அரவிந்த் கெஜ்ரிவால் ஏப்ரல் 16 ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. அதே போல் கோவா மாநில சட்ட மன்ற தேர்தலின் போது, பொதுச் சொத்துக்கு சேதம், ஏற்படுத்திய வழக்கில் ஏப்ரல் 27 ந் தேதி கெஜ்ரிவால் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என கோவா போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.
எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருந்தால் தான், 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்தி புதிய ஆட்சி அமைக்க முடியும். அதற்கு காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்வது தான் சரியாக இருக்கும் என்ற பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் கருத்தை அர்விந்த் கெஜ்ரிவால் ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் வருகின்றன.
நிதிஷுடன், கெஜ்ரிவால் இணக்கமாக செல்வதை விரும்பாத பாஜக, கெஜ்ரிவாலை அச்சுறுத்தும் வகையில், சிபிஐ அனுப்பிய சம்மனை கருதுவதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். வெல்லப் போவது ஆளும் கட்சியா ? எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையா பார்க்கலாம்
-ரா.தங்கபாண்டியன் , நியூஸ் 7 தமிழ்







