இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீட்டிக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் செந்தில் பாலாஜி உள்ளார். இதனையடுத்து அவர் வசம் இருந்த துறைகள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமி ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டன. செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தொடர ஆளுனர் ஏற்க மறுத்த நிலையில், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி வழக்கறிஞரும், தேசிய மக்கள் கட்சியின் தலைவருமான எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதேபோல, அமைச்சர் செந்தில் பாலாஜி எந்த தகுதியின் அடிப்படையில் அமைச்சரவையில் நீடிக்கிறார் என விளக்கம் கேட்க உத்தரவிடக் கோரி அதிமுக முன்னாள் எம்.பி. ஜெயவர்த்தன், சென்னை கொளத்தூரைச் சேர்ந்த ராமச்சந்திரன் ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அனைத்து வழக்குகளிலும் வாதங்கள் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.







