கார் விபத்து; யாஷிகா ஆனந்த் மீது வழக்குப் பதிவு

மாமல்லபுரம் அருகே நிகழ்ந்த சாலை விபத்து தொடர்பாக, நடிகை யாஷிகா ஆனந்த் மீது மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர்…

மாமல்லபுரம் அருகே நிகழ்ந்த சாலை விபத்து தொடர்பாக, நடிகை யாஷிகா ஆனந்த் மீது மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் தனது நண்பர்களுடன் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் சாலையில் காரில் பயணித்துள்ளார். அப்போது, ஈசிஆர் சாலை சூளேரிக்காடு பகுதியில் நள்ளிரவு 1 மணியளவில் அவர் பயணித்த கார் சாலையின் சென்டர் மீடியனில் மோதி அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த யாஷிகா ஆனந்த் மற்றும் அவரது ஆண் நண்பர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி வள்ளிச்செட்டி பவாணி (28) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், இந்த விபத்து தொடர்பாக நடிகை யாஷிகா ஆனந்த் மீது வாகனத்தை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டுதல் மற்றும் உயிர்சேதம் ஏற்படுத்தும் விதமாக இயக்குதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் யாஷிகா ஆனந்த் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.