EVM-ஐ திறக்க மொபைல் போனை பயன்படுத்திய விவகாரம் – தேர்தல் ஆணையம் விளக்கம்?

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாட்டுக்கு ஓடிபி எண் எதுவும் தேவையில்லை; அதில் வயர்லெஸ் தொலைத்தொடர்பு வசதிகள் இல்லை என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மகாராஷ்டிரா மாநிலம், மும்பை வடமேற்கு மக்களவை தொகுதியில் சிவசேனா…

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாட்டுக்கு ஓடிபி எண் எதுவும் தேவையில்லை; அதில் வயர்லெஸ் தொலைத்தொடர்பு வசதிகள் இல்லை என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை வடமேற்கு மக்களவை தொகுதியில் சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு) சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ரவீந்திர வைக்கர்.  ரவீந்திர வைக்கர்,  சிவசேனாவின் அமோல் கஜானன் கிர்த்திகரை வெறும் 48 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.  ரவீந்திர வைக்கரின் மைத்துனர் மங்கேஷ் பாண்டில்கர்.  வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற கடந்த 4ஆம் தேதி மும்பை கோரேகான் பகுதியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் இவர் மொபைல் போனை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

வாக்கு எண்ணிக்கை மையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை (இவிஎம்) திறக்க, ஒரு முறை கடவுச்சொல்லை (ஓடிபி) உருவாக்க இவரது மொபைல்போன் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.  இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  இந்த நிலையில்,  இது குறித்து மும்பை வடமேற்கு மக்களவை தொகுதி தேர்தல் அதிகாரி வந்தனா சூர்யவன்ஷி செய்தியாளர்களிடம் கூறியதாவது,  “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (இவிஎம்) மிகுந்த பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.

அதில் எவ்வித முறைகேடும் செய்ய இயலாது.  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாட்டுக்கு ஓடிபி எண் எதுவும் தேவையில்லை.  அதில் வயர்லெஸ் தொலைத்தொடர்பு வசதிகள் இல்லை.  ஆகவே இது பொய்யான தகவல்.  பொய்யான தகவலை பதிவிட்ட பத்திரிகைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு 24 மணி நேரத்தில் உரிய விளக்கமளிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

ஜோகேஸ்வரி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட, தரவு உள்ளீடு செய்யும் அலுவலர் தினேஷ் குராவ்வின் தனிப்பட்ட கைப்பேசி அங்கிருந்த சிலருக்கு கைமாறப்பட்டுள்ள சம்பவம்  துரதிஷ்டவசமானது.  இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  இச்சம்பவத்துக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.  கைப்பேசிக்கு வரும் ஓடிபி எண் மூலம் டேட்டா எண்ட்ரி பணிகளுக்கு உள்ளீடு செய்ய பயன்படுகிறது.  இவை அனைத்தும் வேட்பாளர்கள் அல்லது முகவர்கள் முன்னிலையிலேயே நடத்தப்படுகிறது.

தோல்வியடைந்த வேட்பாளர் அமோல் கஜஞ்சன் உள்பட யாரும் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரவில்லை.  தபால் ஓட்டுகளை மட்டுமே எண்ண கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.  நீதிமன்ற உத்தரவின் பேரில் மட்டுமே, அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான விவரங்களை வெளியிட முடியும்” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.