அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்குகளின் விசாரணை இன்று நடைபெறவுள்ளது.
ஓபிஎஸ் தரப்பினரின் மேல்முறையீட்டு வழக்குகள், நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரிக்கப்பட்டது. அதிமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் வாதங்களை முன்வைத்தார்
அப்போது, கட்சி விவகாரங்கள், ஒழுங்கு நடவடிக்கை உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க பொதுக்குழுவிற்கு உச்ச பட்ச அதிகாரம் உள்ளது என்றும், கட்சி விதிகள், கட்சி விதிகளின்படியே திருத்தப்பட்டுள்ளன. விதிகள் திருத்தத்தில் எந்த தவறும் இல்லை. ஒரு காலத்தில் தலைவராக, முதல்வராக இருந்திருக்கலாம்.
தலைவர்கள் வரலாம்; போகலாம். மக்களின் விருப்பப்படி தான் கட்சி தொடர வேண்டும். அனைத்து நடவடிக்கைகளும் கட்சி நலன் கருதியே எடுக்கப்பட்டன. நிர்வாகிகளை நியமித்து இணையாக கட்சி நடத்தும் நபரால் முன் வைக்கப்படும் இந்த வாதங்கள் பதவிப்பசி காரணமாக முன் வைக்கப்படுகின்றன என அவர் வாதிட்டார்.
கட்சியின் செயல்பாட்டை முடக்க வேண்டும் என்ற நோக்கில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அதிமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து இன்று மீண்டும் விசாரணை நடைபெறவுள்ளது.







