ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்த வழக்கு – Stand-Up காமெடியன் குணால் கம்ராவுக்கு முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்த வழக்கில் Stand-Up காமெடியன் குணால் கம்ராவுக்கு முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த சமீபத்திய சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராகவும்  சிவசேனா கட்சியை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் ஆகியோர் துணை முதலமைச்சராக பணியாற்றி வருகின்றனர். இதில் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் மற்றோரு பிரிவு இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கிறது.

இந்த சூழலில் அம்மாநிலத்தின் பிரபல Stand-Up காமெடி நடிகர் குணால் கம்ரா, தான் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில், சிவசேனா கட்சியில் ஏற்பட்ட பிளவு குறித்து பேசி ஏக்நாத் ஷிண்டேவை  ‘துரோகி’ என விமர்சனம் செய்துள்ளார். இதனால் கோபமடைந்த ஏக்நாத் ஷிண்டே தரப்பினர் நிகழ்ச்சி நடத்த மும்பை கார் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலை சூறையாடினர். அதன் பிறகு இச்சம்பவம் அம்மாநில அரசியல் களத்தில் பேசுபொருளானது.  குணால் கம்ராவுக்கு என்டிஏ கூட்டணியினர் எதிராகவும் இந்தியா கூட்டணியினர் ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வந்தனர்.

இதனிடையே சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு) எம்எல்ஏ முர்ஜி படேல்,குணால் கம்ரா மீது வழக்கு தொடர்ந்து, இரண்டு நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார். இந்த வழக்கில் குணால் கம்ரா மும்பை உயர் நீதிமன்றத்தை அணுகி வழக்கமான முன்ஜாமீன் பெறும் வரை, கடந்த 2021-ல் தனது வசிப்பிடத்தை விழுப்புரம் மாவட்டத்துக்கு மாற்றிவிட்டதாகவும், தனக்கு மாநிலங்களுக்கு இடையேயான முன்ஜாமீன் வழங்குமாறும் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த நிலையில் அவர் அளித்த மனு மீதான விசாரணை நீதிபதி சுந்தர் மோகன் விசாரித்தார். அப்போது அவர்  Stand-Up காமெடி நடிகர் குணால் கம்ராவுக்கு ஏப்ரல் 7 ஆம் தேதி வரை இடைக்கால முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.