இசையமைப்பாளர் பரத்வாஜ்க்கு “குறள் இசையோன்” பட்டம் வழங்கியது கனடா அரசு!

இசையமைப்பாளர் பரத்வாஜ்க்கு கனடா நாட்டில் நடைபெற்ற ‘உலக திருக்குறள் மாநாட்டில்’ டொராண்டோ தமிழ் சங்கம் “குறள் இசையோன்” பட்டம் வழங்கியது.

காதல் மன்னன், அமர்க்களம், ஜெமினி, ரோஜாக்கூட்டம், பாண்டவர் பூமி, ஆட்டோகிராப் போன்ற பல படங்களுக்கு இசையமைத்ததோடு, அணைத்து பாடல்களையும் ‘மெகா ஹிட்’ செய்தவர் இசையமைப்பாளர் பரத்வாஜ். இவர் 1330 திருக்குறளை, 1330 பாடகர்களை பாட வைத்து, திருக்குறள் முழுவதையும் இசை வடிவில் 10 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கினார்.

கனடா நாட்டில் டொராண்டோ தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற ‘உலக திருக்குறள் மாநாட்டில்’ பரத்வாஜ் சிறப்பு விருந்தினராக அழைத்து, 1330 திருக்குறளையும் இசை வடிவில் கொடுத்த அவருக்கு பாராட்டு விழா நடத்தி, ‘குறள் இசையோன்’ பட்டத்தையும் வழங்கியது. கனடா அரசும் அந்த விழாவில் பரத்வாஜ் அவர்களின் திருக்குறள் தமிழ் சேவையை பாராட்டி சர்டிபிகேட் கொடுத்து, கௌரவித்தது.

இந்த விழாவில் அந்நாட்டில் உள்ள தமிழ் பாடகர்கள் பங்கேற்று பரத்வாஜ் இசையமைத்த திருக்குறள் பாடல்களை பாடி, தமிழ் ரசிகர்களை பரவசமடைய வைத்தனர். பரத்வாஜின் மகள் ஜனனி பரத்வாஜ் மேடையில் திருக்குறள் பாடினார். அப்போது இசையமைப்பாளர் பரத்வாஜ்ம் பாடினார். 12 வருட கடுமையான உழைப்பில் தான் உருவாக்கிய திருக்குறள் இசை ஆல்பத்திற்கு கனடா நாட்டில் டொராண்டோ தமிழ் சங்கம் விழா எடுத்து, உலக ‘திருக்குறள் மாநாட்டில்’ கௌரவித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.