29.7 C
Chennai
May 20, 2024
முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தொழில்நுட்பம் செய்திகள்

கிரகணத்தை பார்த்தால் ஆபத்தா?


முனைவர் வெங்கடேஸ்வரன் த வி

கட்டுரையாளர்

முந்தைய சூரிய சந்திர கிரகணங்களின் போது ஒவ்வொரு முறையும் போலிச் செய்திகள் பரப்பியது போலவே , எதிர்வரும் அக்டோபர் 25 சூரிய கிரகணம் குறித்தும் பரப்பி வருகின்றனர்.

வரும் அக்டோபர் 25 அன்று சூரிய கிரகணம் ஏற்படும் என்பதும், பாரம்பரியப் பஞ்சாங்கம் கணித்தபடி நடக்கிறது. மேலும் கிரகணக் காலங்கள் மிகச்சரியாக நம் பஞ்சாங்கங்கள் கணித்து உள்ளன என்றும் கூறிக்கொள்கின்றனர். கிரகணச் சமயத்தில் கர்ப்பிணிப் பெண்கள் வெளியே வரவேண்டாம் எனவும் வாட்ஸ்ஆப் செய்திகள் காட்டுத் தீ போலப் பரவி வருகிறது. ஆனால், மிகத் துல்லியமாக பஞ்சாங்கம் கணிப்பது இல்லை என்பதோடு, கிரகணத்தின் போது எந்தவித மான மர்மக் கதிர்களும் வெளிப்படுவதும் இல்லை. இந்த அறிவியல் உண்மையை நாம் உரக்கச் சொல்ல வேண்டி இருக்கிறது .

பிழைபட்ட பஞ்சாங்கக் கணிப்பு

சூரியனுக்கும் நிலவுக்கும் இடையே உள்ள கோணம் தான் திதி. சூரியனுக்கும் நிலவுக்கும் இடையே 12 பாகை (டிகிரி) கொண்டது ஒரு திதி. சுக்லபட்ச பிரதமை எனும் முதல் திதி 0-12 பாகை [அதாவது வளர்பிறை கால முதல் நாள் என்றே பொருள்]; சுக்லபட்ச துவிதியை எனும் இரண்டாம் திதி 12-24 டிகிரி என அடுத்தடுத்த திதிகள் அமையும். இறுதி 348-360 பாகை வரை அமாவாசை திதி ஆகும். நிலவு, பூமி, சூரியன் என்ற வரிசையில் ஒரே தளத்தில் அமையும்போது பௌர்ணமி திதி முடிவுக்கு வரும். அடுத்த திதியான கிருஷ்ணப் பட்சப் பிரதமை (தேய் பிறைக்கால முதல் நாள் ) துவங்கும். அதேபோல பூமி, நிலவு, சூரியன் என்ற வரிசையில் ஒரே தளத்தில் அமையும்போது அமாவாசை திதி முடிந்து அடுத்த திதியான சுக்லபட்சப் பிரதமை துவங்கும் (முதலாம் வளர் பிறை). அதாவது சூரியனுக்கும் நிலவுக்கும் இடையே பூச்சியம் பாகை அமையும்போது அமாவாசை திதி முடிவுக்கு வரும்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

எனவே சூரிய கிரகணம் ஏற்பட்டால் அமாவாசை முடிவுறும் நிலையில் தான் உச்சபட்சக் கிரகணம் -அதிகபட்ச மறைப்பு – ஏற்படவேண்டும். அதாவது, அக்டோபர் 25 அன்று நிகழும் சூரிய கிரகணத்தின் போது, சென்னையில் உச்சபட்சச் சூரிய கிரகணம் 17:42 மணிக்கு நிகழும். ஆனால் சென்னையில் அமாவாசை திதி முடியும் காலம் 16:18 என வாக்கியப் பஞ்சாங்கமும், 16:19 என திருக்கணித பஞ்சாங்கமும் கூறுகிறது. இது சரியல்ல. எனவே இரண்டு வகைப் பஞ்சாங்கங்களும் பிழையானது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

பஞ்சாங்கம் என்றால் என்ன?

பஞ்சாங்கம் என்பது பல்லி விழுந்த பலன் போலக் குறி சொல்லும் புத்தகம் எனவும் கோள்கள் மற்றும் நட்சத்திரங்கள் நம் வாழ்வின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை வெளிப்படுத்தும் கணிதம் எனவும் கருதப்படுகிறது. நவீன நாட்காட்டிகள் உருவாக்குவதற்கு முன்னர் இருந்த நாட்காட்டி தான் பஞ்சாங்கம்.

பஞ்ச +அங்கம் அதாவது வாரம், திதி (நிலவின் பிறை), நட்சத்திரம் (அன்றைய வானில் நிலவின் நிலை), கர்ணம் (திதியின் இரண்டு பகுதி),யோகம்(நிலவு மற்றும் சூரிய நிலையின் கோணத்தின் கூட்டு)

ஆகிய ஐந்து வானியல் நிலையைக் கொண்டுள்ள பட்டியல். குறிப்பிட்ட நாளில் நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில் என்ன திதி இருக்கும், என்ன நக்ஷத்திரம் இருக்கும் என்பது போல, பஞ்ச + அங்கம் பட்டியல் செய்வது ஆகும்.

பஞ்சாங்கக் குளறுபடி

நவீன அறிவியல்படி நட்சத்திர ஆண்டு சுமார் 365.25636 நாட்கள் ஆகும். ஆனால் ஆரியபட்டரின் சித்தாந்தத்தின் படி இது 365. 258681 நாட்கள், சூரிய சித்தாந்தத்தின் படி இது 365.258756 நாட்கள். வாக்கியப் பஞ்சாங்கத்தின் படி 248நாட்களுக்கு ஒருமுறை நிலவு தனது நிலையை வானில் மறுபடி துல்லியமாக எட்டும். ஆனால் நவீன அறிவியலின் படி 247.99095 நாட்களுக்கு ஒரு முறை எட்டிவிடும். பஞ்சாங்கக் கணிதம் உருவானது ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால்; அப்போது இந்த பிழைகள் பெரிதும் பாதிப்பு தரவில்லை. ஆனால் காலப்போக்கில் இந்த சிறு பிசிறுகள் ஒன்று சேர்ந்து பெரும் பிழையாக மாறிவிட்டது. இடைக்காலத்தில் ஏற்பட்ட சமூக இறுக்கத்தின் தொடர்ச்சியாக வாக்கியக் கரணம் போன்ற நூல்களை “கடவுள் அருளிச் செய்தது” எனக்கூறத்துவங்கினர். எனவே கடவுளின் வாக்காக வாக்கியங்கள் கருதப்பட்டுப் பிழை திருத்தப்படவில்லை. இதன் தொடர்ச்சியாக இன்று பஞ்சாங்கக் கணிப்புக்கும் வான் பொருள்களின் மெய்யான நிலைக்கும் பெரும் வேறுபாடு உள்ளது. எடுத்துக்காட்டாக இன்று ஜனவரி 14 அன்று உத்தராயணம் எனப் பிழையாகக் கொண்டாடி வருகிறோம். ஆனால் உள்ளபடியே டிசம்பர் 21/22 அன்று உத்தராயணம் ஏற்பட்டு விடுகிறது. இவ்வாறு பஞ்சாங்கத்தின் பற்பல அபத்தமான பிழைகள் வானவியல் அறிந்தவர்களுக்கு வெள்ளிடை மலை போல் விளங்கும்.

குட்டு வெளிப்படும்

ஆயிரம் வருடம் முன்பு ஏற்படுத்தப்பட்ட சூத்திரங்கள் பலநூறு ஆண்டுகளாக உண்மை கிரக நிலையுடன் ஒப்பிட்டுத் திருத்தம் செய்யாமல் அப்படியே பயன்படுத்துவதால் பஞ்சாங்கத் தகவல்கள் உண்மையான கிரக நிலையிலிருந்து வேறுபட்டு அமைகிறது.

கிரகணம் போன்ற வெறும் கண்களால் எளிதில் காணக்கூடிய நிகழ்வுகள் பிழையாக இருந்தால் ஊர்மக்கள் கைகொட்டிச் சிரிப்பார்கள்

என்பதால், பஞ்சாங்கம் பிரசுரம் செய்பவர்கள் தங்கள் கணிப்பை ஒதுக்கி வைத்துவிட்டு அறிவியல் நிறுவனமான வான்பொருள் நிலை கணிப்பு மையம், கொல்கத்தா (Positional Astronomy Centre, Kolkata) கணிக்கும் தரவுகளை அப்படியே தங்களது பதிப்பில் பிரசுரம் செய்து விடுகிறார்கள். எனவே தான் கிரகணத்தின் துவக்கம் முடிவு போன்றவை ஒத்து வருவது போல நமக்குப் புலப்படுகிறது.

ஆனால் திதி போன்ற அம்சங்களைப் பாரம்பரியச் சூத்திரம் கொண்டு கணிக்கிறார்கள். எனவே தான் அக்டோபர் 25 அன்று சென்னையில் 17:42 மணிக்கு முடியும் அமாவாசையை 16:18 என வாக்கியப் பஞ்சாங்கமும், 16:19 என திருக்கணித பஞ்சாங்கமும் பிழையாகக் கூறுகிறது. இரவு வானில் நிலவு அற்று இருக்கும்போது அந்த நாள் அமாவாசை இரவு என எளிதில் காணலாம். ஆனால் மிகச் சரியாக பூமி, நிலவு சூரியன் ஒரே தளத்தில் நின்று அமாவாசை திதி முடிவுறுவதை வெறும் கண்களால் காணவியலாது. கிரகணம் குறித்த விவரங்களை மேலோட்டமாக பார்த்தால் பஞ்சாங்கம் சரியாக தானே கூறுகிறது எனக் கருதத்துணிவோம். ஆனால் பஞ்சாங்க கணித விபரங்களை உற்றுநோக்கினால் குட்டு வெளிப்பட்டு விடும்.

மர்மக் கதிர்கள் மறைத்து நிழல் ஏற்படுவது போல, நிலவு, சூரியனுக்கு முன்புறமாகச் செல்லும்போது சில மணித்துளிகள் சூரியனை மறைக்கிறது. இதுவே கிரகணம். அதாவது

குடை, மரம், கட்டிடம் போல நிலவு ஏற்படுத்தும் வெறும் நிழல் தான் கிரகணம். கிரகணச் சமயத்தில் சூரியனில் எந்தவொரு சிறப்பு மாற்றமும் ஏற்படுவதில்லை.

எப்போதும் போல நாற்புறமும் தன் ஒளியை வீசிக்கொண்டு இருக்கிறது. வேறு எந்த சிறப்பு மர்மக்கதிர்களும் வெளிப்படுவது இல்லை. பூமி இருக்கும் திசையில் இடையில் நிலவு வந்து மறைத்து விடுவதால் பூமியில் சில பகுதிகளில் சூரிய முகம் மறைக்கப்படுகிறது. அந்த பகுதியில் மட்டும் கிரகணம் தென்படும். உலகில் வேறெங்கும் கிரகணத்தைக் கண்டு கர்ப்பிணிப் பெண்கள் ஓடி ஒளிந்து கொள்வதில்லை. அங்கெல்லாம் கர்ப்பிணிப் பெண்களுக்கும் வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கும் எந்தவொரு ஆபத்தும் ஏற்படுவதில்லை. கருக்கொண்ட பூச்சிகள் முதல் விலங்குகள் வரை அதன் போக்கில் கிரகணத்தின் போது வெளியே திரிந்துகொண்டு தான் உள்ளன. அவற்றுக்கும் எந்தவொரு ஆபத்தும் ஏற்படுவதில்லை.

பாதுகாப்பாக காண்போம்

சூரிய சந்திர கிரகணம் என்பது அற்புதமான வானக்காட்சி. இயற்கையின் இந்த விளையாட்டைப் பாதுகாப்பாக கண்டு களிக்க வேண்டும். வெறும் நிழலைக் கண்டு அச்சப்படுவது பேதைமை. தமிழ்நாடு அறிவியல் மையம், தமிழ்நாடு அறி வியல் இயக்கம் போன்ற பல்வேறு அரசு மற்றும் தன்னார்வ அறிவியல் பிரச்சார அமைப்புக்கள் பொதுமக்கள் பாது காப்பாக கிரகணத்தைக் கண்டுகளிக்கும் வண்ணம் வெவ்வேறு இடங்களில் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்கள். உங்கள் பகுதியில் நடைபெறும் நிகழ்வுகளைக் கண்டறிந்து பங்கேற்க வேண்டும்.

  • முனைவர் த.வி. வெங்கடேஸ்வரன் 
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading