சாதிவாரி கணக்கெடுப்பு கோரி பொதுமுடக்கத்திற்கு அழைப்பு

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் பணியாளர் கூட்டமைப்பு, இன்று நாடு தழுவிய பொதுமுடக்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும், SC/ST/OBC பிரிவினருக்கு தனியார் துறையிலும்…

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் பணியாளர் கூட்டமைப்பு, இன்று நாடு தழுவிய பொதுமுடக்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும், SC/ST/OBC பிரிவினருக்கு தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்தக் கூடாது, விவசாய விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயத்தை சட்டப்பூர்வமாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி இந்த பொது முடக்கத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த பொதுமுடக்கத்திற்கு பிகார் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் ஓரளவு செல்வாக்குள்ள பகுஜன் முக்தி கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ஆதரவு தெரிவித்துள்ள போதிலும், அவரது கட்சி இந்த பொதுமுடக்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.

SC/ST தவிர வேறு சாதிகளுக்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில்லை என்பது அரசின் கொள்கை முடிவு என மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்த நிலையில், இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.