“தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கிளாம்பாக்கம் வரை பேருந்துகள் இயக்கப்படும்” – போக்குவரத்து கழகம் அறிவிப்பு

தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் நாளை மறுநாள்(மார்ச்.04) முதல் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

தென்மாவட்டங்களில் இருந்து தாம்பரம் வரை  இயக்கப்பட்டு வந்த பேருந்துகள்  இனி கிளாம்பாக்கம் வரை இயக்கப்படும் என தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் மண்டலம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,  “தாம்பரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தாம்பரம் மாநகர போக்குவரத்துக் காவல்துறை வழங்கியுள்ள பரிந்துரையின்படி, தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் இருந்து செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக தாம்பரம் வரை இயக்கப்பட்டு வந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் அனைத்தும் 04/03/2025 செவ்வாய்க்கிழமை முதல் சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் வரை இயக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

மேலும் பயணிகள் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து தாம்பரம் மற்றும் பிற இடங்களுக்கு செல்ல மாநகர பேருந்துகளை பயன்படுத்திக் கொள்ள அன்புடன் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.