ராணுவ பயிற்சியை நிறைவு செய்தார் #BTS ஜே-ஹோப்!

ராணுவ பயிற்சியை முடித்துக்கொண்டு, பிடிஎஸ் உறுப்பினர் ஜே-ஹோப் வெளியே வந்தார். ஜின், சுகா,  ஆர்.எம், ஜே-ஹோப்,  ஜிமின், வி,  ஜங்கூக் ஆகிய 7 இளைஞர்களை உறுப்பினர்களாகக் கொண்டு, உலகளவில் பிரபலமாக உள்ள இசைக்குழுதான் BTS.…

#BTS member J-Hope completes military training!

ராணுவ பயிற்சியை முடித்துக்கொண்டு, பிடிஎஸ் உறுப்பினர் ஜே-ஹோப் வெளியே வந்தார்.

ஜின், சுகா,  ஆர்.எம், ஜே-ஹோப்,  ஜிமின், வி,  ஜங்கூக் ஆகிய 7 இளைஞர்களை உறுப்பினர்களாகக் கொண்டு, உலகளவில் பிரபலமாக உள்ள இசைக்குழுதான் BTS. இந்தக் குழுவின் பாடல்கள், தென் கொரியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பிரபலமாக உள்ளது. தற்போது BTS குழுவினர் ராணுவ பயிற்சி பெற்று வருகின்றனர்.

தென்கொரியாவில் இளைஞர்கள் அனைவரும் கட்டாய ராணுவப் பயிற்சி பெறவேண்டும். அந்த வகையில் BTS குழுவினரும் ராணுவ பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதில் ஜின்னின் பயிற்சி காலம் முடிவடைந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் தான் வெளியே வந்தார். தொடர்ந்து தனது துறைரீதியான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் கே-பாப் நட்சத்திரம் ஜே-ஹோப், தனது ராணுவ பயிற்சியை முடித்துக் கொண்டு இன்று வெளியே வந்தார். கேங்வான் மாகாணத்தில் உள்ள வோன்ஜுவில் உள்ள ராணுவ தளத்தில் விடுவிக்கப்பட்ட ஜே-ஹோப்பை காண ஜின் மற்றும் ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்.

பயிற்சி முகாமில் இருந்து வெளியே வந்த அவர் பேசியதாவது;

“ரசிகர்களுக்கு நன்றி. நான் ராணுவப் பயிற்சியை நல்ல உடல்நலத்தோடு, பாதுகாப்பாக முடித்தேன். ராணுவ வீரர்கள் அனைவரும் கடினமாக உழைத்து, தங்களை அர்ப்பணித்து, நாட்டைப் பாதுகாத்து வருகின்றனர் என்பதை இந்த ஒன்றரை ஆண்டுகளாக நான் உணர்ந்தேன்” என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.