முக்கியச் செய்திகள் உலகம் கட்டுரைகள் செய்திகள்

பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார்?: தேர்தல் களத்தில் 2 இந்திய வம்சாவளியினர்


எஸ்.இலட்சுமணன்

கட்டுரையாளர்

அடுத்த பிரிட்டன் பிரதமர் யார்? உலகம் மிகுந்த ஆர்வத்தோடு உற்றுநோக்கும் இந்த கேள்விக்கு அடுத்த வாரம் விடை கிடைத்துவிடும். பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் அந்த பொறுப்பை ஏற்ற 45 நாட்களிலேயே ராஜினாமா செய்ததால்  ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்திற்கு அடுத்த வாரம் தீர்வு காணப்பட்டுவிடும்.  ஜி20. ஜி10, ஜி7, காமன்வெல்த் என உலக பிரச்சனைகளுக்கு   தீர்வு காணும் அமைப்புகளில்  முக்கிய பங்கு வகிக்கும், உலகின் 6வது பெரிய பொருளாதார சக்தி பிரிட்டன். அந்த நாட்டின் பிரதமர் யார் என்பதை அறிய சர்வதேச நாடுகளின் தலைவர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். அந்த வாய்ப்பு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவருக்கு நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. அவர் யார், அவருடன் போட்டி போடுபவர்கள் யார்? யார்? என்பதை அறிவதற்கு முன்பு பிரிட்டன் பிரதமர் எப்படி தேர்வு செய்யப்படுவார் என்பதை முதலில் பார்த்துவிடுவோம்.

பிரிட்டன் பிரதமர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுவார்?

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

1) பிரிட்டனில் தற்போது ஆளுங்கட்சியாக இருக்கும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவரே பிரிட்டனின் அடுத்த பிரதமராக நியமிக்கப்படுவார். கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறைகள் அடுத்த வாரம் நடைபெற உள்ளது. 1922 கமிட்டி என அழைக்கப்படும் கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆட்சிமன்ற குழுதான் இந்த தேர்தல் நடைமுறைகளை மேற்கொள்ளும்.

2) பிரிட்டன் நாடாளுமன்றத்தின் மக்களவையில் கன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினராக உள்ள 357 பேரில் 100 பேரின் ஆதரவைப் பெறுபவர்கள்தான் அக்கட்சியின் தலைவர் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும்.

3) வரும் திங்கட்கிழமை மாலை  3.30 மணிக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் எனக் கூறப்படுகிறது. பிரிட்டன் நாடாளுமன்ற மக்களவையில் உள்ள கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்களில் அரசாங்க பதவிகளில் இல்லாத எம்.பிக்கள் இந்த தேர்தலில் வாக்களிப்பார்கள்.

4) இரண்டுக்கு மேற்பட்டவர்கள் போட்டியிட்டால், முதல் இரண்டு இடங்களை பிடித்தவர்கள் தவிர  மற்றவர்கள் போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்.

5) முதல் கட்ட வாக்குப்பதிவில் தேர்வான இரண்டுபேரில் யாருக்கு எம்.பிக்கள் அதிக முன்னுரிமை கொடுக்கிறார்கள் என்பதை அறிய, இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும். இந்த முன்னுரிமை வாக்குகளின் முடிவுகள் திங்கட்கிழமை இரவு 9 மணிக்கு அறிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

6) பின்னர் அந்த இரு போட்டியாளர்களிடையே கன்சர்வேட்டிவ் கட்சி தொண்டர்களின் வாக்குகளை வைத்து அடுத்தக்கட்ட பலப்பரிட்சை நடைபெறும். சுமார் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேர் இந்த தேர்தலில் வாக்களிப்பார்கள். இந்த தேர்தல் அடுத்தவாரம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு முன்பாக இரு போட்டியாளர்களிடையே நேருக்கு நேராக தொலைக்காட்சி விவாதமும் நடைபெறும். கட்சி தொண்டர்கள் பங்கேற்கும் வாக்குப்பதிவில் அதிக வாக்குகளை பெறுபவர்கள் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார். பின்னர் அவரே பிரிட்டன் பிரதமராக அந்நாட்டு மன்னர் சார்லசால் நியமிக்கப்படுவார்.

பிரிட்டன் பிரதமர் போட்டியில் யார்…யார்?…

பிரிட்டன் பிரதமர் ஆவதற்கான போட்டியில் களம் இறங்க முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்திய வம்சாவழியைச் சேர்ந்த ரிஷி சுனக் உள்ளிட்ட   5 பேர் உள்ளதாகக் தகவல்கள் கூறுகின்றன.

ரிஷி சுனக் 

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் ஏற்கனவே பிரிட்டன் பிரதமர் பதவியை நெருங்கி வந்து கடைசி நேரத்தில் அந்த வாய்ப்பை தவறவிட்டவர். கடந்த 2 மாதங்களுக்கு முன் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் தேர்தலில் லிஸ் டிரஸ்சுக்கும் இவருக்கும் போட்டி நடந்தபோது, எம்.பிக்கள் வாக்குகளை பொறுத்தவரை ரிஷி சுனக்கே அதிக வாக்குகளை பெற்றார். ரிஷி சுனக் 137 வாக்குகளையும் லிஸ் டிரஸ் 113 வாக்குகளையும் பெற்றனர். அதே நேரம் கட்சி தொண்டர்கள் வாக்குப்பதிவை பொறுத்தவரை லிஸ் டிரஸ் 57 சதவீத வாக்குகளையும், ரிஷி சுனக் 33 சதவீத வாக்குகளையும் பெற்றனர். கட்சி தொண்டர்களின் வாக்குகள் சொல்லும் முடிவே இறுதியானது என்பதால் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராகவும், பிரிட்டன் பிரதமராகவும் லிஸ் டிரஸ் ஆனார். அப்போது பிரதமர் பதவியை தவறவிட்ட ரிஷி சுனக்கிற்கு தற்போது வாய்ப்புகள் அதிகம் கூடிவந்துள்ளதாகக் கருதப்படுகிறது. இங்கிலாந்தின் முன்னாள் நிதியமைச்சரான ரிஷி சுனக், இன்போஸிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.

போரிஸ் ஜான்சன்

இங்கிலாந்து முன்னாள் பிரதமரான போரிஸ் ஜான்சன் கடந்த ஜூலை மாதம்தான் அந்த பதவியிலிருந்து விலகியிருந்தார். ஊழல் குற்றச்சாட்டுக்கள் மற்றும் கொரோனா சூழலை சரியாக கையாளாதது போன்ற விமர்சனங்கள் சூழ்ந்த நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் மீண்டும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு பிரதமர் பதவியை கைப்பற்ற அவர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பென்னி மோர்டான்ட்

பிரிட்டன் பாதுகாப்புத்துறை அமைச்சராக பதவி வகித்த முதல் பெண் என்கிற பெருமைக்கு உரியவர் பென்னி மோர்டான்ட். தெரஸா மே பிரிட்டன் பிரதமராக இருந்தபோது இந்த பெருமை அவருக்கு கிடைத்தது. பிரிட்டன் நாடாளுமன்ற மக்களவையின் தலைவராக தற்போது உள்ள பென்னி மோர்டான்ட், கடந்த முறை  லிஸ் டிரசை எதிர்த்து பிரதமர் பதவிக்கான போட்டியில் களம் இறங்கி தோல்வி அடைந்தார். தற்போது மீண்டும் ஒருமுறை முயற்சித்து பார்க்க போட்டியில் குதித்துள்ளார்.

கெமி பெடினோச்

பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சராக உள்ள கெமி பெடினோச் கறுப்பினத்தைச் சேர்ந்தவர். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் பிறந்த கெமி நைஜீரியாவிலும், அமெரிக்காவிலும் தனது பள்ளி பருவ காலத்தை கழித்தார். பின்னர் அவரது குடும்பம் மீண்டும் இங்கிலாந்திற்கு குடிபெயர்ந்தது. நிறவெறிக்கு எதிராக பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கெமி பெடினோச் ஆற்றிய உரை மிகவும் பிரபலம்.

சூயெல்லா பிராவர்மென்

லிஸி டிரஸ் அமைச்சரவையில் 44 நாட்கள் உள்துறை அமைச்சராக பதவி வகித்தவர் சூயெல்லா பிராவெர்மென். சிறந்த வழிக்கறிஞரான சூயெல்லா பிராவர்மென் இங்கிலாந்து மற்றும் வேல்சின் அட்டார்னி ஜெனராலாக பதவி வகித்தவர். ரிஷி சுனக்கை அடுத்து பிரிட்டன் பிரதமர் பதவிக்கான போட்டியில் களம் இறங்க உள்ள மற்றொரு இந்திய வம்சாவளி நபர் சூயெல்லா பிராவர்மென். இவரது தாய் உமா தமிழகத்திலிருந்து இங்கிலாந்திற்கு குடிபெயர்ந்தவர். ஏற்கனவே பிரதமர் பதவிக்கான போட்டியில் களம் இறங்கி தோல்வி அடைந்த சூயெல்லா பிராவர்மென் பின்னர் லிஸ் டிரஸ் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அரசாங்க தகவல் ஒன்றை விதிகளை மீறி வெளியிட்டதாக குற்றச்சாட்டில் சிக்கி அவர் கடந்த 19ந்தேதி அமைச்சரவையிலிருந்து விலகினார். இவரும் இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான போட்டியில் களம் இறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு பிரிட்டன் பிரதமர் பதவிக்கான போட்டி சூடுபிடித்து வரும் நிலையில் யார் இறுதி களத்தில் உள்ளார் என்பது நாளை அல்லது நாளை மறுநாள் தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே பிரிட்டன் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு உடனடியாக பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி அறிவித்துள்ளது. வரும் ஜனவரி மாதத்துடன் கன்சர்வேட்டிவ் கட்சியின் பதவிக்காலம் நிறைவடைகிறது. வரும் தேர்தலில் தொழிலாளர் கட்சி ஆட்சியை பிடிக்கவே அதிக வாய்ப்புகள் உள்ளதாக கருத்துக்கணிப்புகள் கூறும் நிலையில் முன்கூட்டியே பொதுத் தேர்தலை நடத்த தொழிலாளர் கட்சி வலியுறுத்தி வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன.

-எஸ்.இலட்சுமணன்

 

 

 

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

என்ஐஏ சோதனைக்கு எதிராக கேரளாவில் இன்று போராட்டம்:தமிழக பேருந்துகள் எல்லையில் நிறுத்தம்

EZHILARASAN D

கையில் வளர்த்து, முகத்தில் பொருத்தப்பட்ட மூக்கு – பிரெஞ்சு மருத்துவர்கள் சாதனை

EZHILARASAN D

குழந்தைகளை கண்ணாடி போல கையாள வேண்டும் – துணை நிலை ஆளுநர் தமிழிசை அறிவுரை

Dinesh A