“ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் தொடர்பில்லை” – பொலிவியா அதிபர் லூயிஸ் ஆர்ஸ்

பொலிவியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில்  தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்ட நிலையில்,  அதிபர் லூயிஸ் ஆர்ஸ் மறுப்பு தெரிவித்துள்ளார். தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் அதிபர் லூயிஸ் ஆர்ஸ் தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது.…

பொலிவியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில்  தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்ட நிலையில்,  அதிபர் லூயிஸ் ஆர்ஸ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் அதிபர் லூயிஸ் ஆர்ஸ் தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. பொலிவியா ராணுவ தலைமை தளபதியாக இருந்த ஜுவான் ஸுனிகா கடந்த 25ம் தேதி அளித்த பேட்டியொன்றில், வரும் 2025ல் நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் முன்னாள் அதிபா் இவோ மொராலிஸ் மீண்டும் போட்டியிட்டால் அவரைக் கைது செய்யப் போவதாக எச்சரித்தாா். இதனையடுத்து அதிபா் லூயிஸ் ஆா்சே, தளபதி ஸுனிகாவை பதவியிலிருந்து வெளியேற உத்தரவிட்டாா்.

பின்னர் தளபதி ஸுனிகாவின் உத்தரவின் பேரில் அதிபா் மாளிகை உள்ளிட்ட அரசுக் கட்டடங்கள் அமைந்துள்ள முரிலோ சதுக்கத்தை நேற்று முன்தினம் ராணுவம் சுற்றி வளைத்தது. தொடர்ந்து, ஜுவான் ஸுனிகா ஆட்சி கவிழ்க்கப்பட்டதாக உள்ளூா் தொலைக்காட்சியில் அறிவித்தாா். இதனையடுத்து, அதிபர் ஆர்சே ஆட்சிக் கவிழ்ப்புக்கு  எதிராக போராட்டம் நடத்துமாறு தொலைக்காட்சி மூலம் பொதுமக்களை கேட்டுக் கொண்டாா்.

இதன்பேரில் ஆயிரக்கணக்கானவா்கள் ஆட்சிக் கவிழ்ப்பை எதிா்த்து ஆா்ப்பாட்டம் நடத்தினா். பின்னர் அதிபர் ஆர்சே ராணுவம், விமானப் படை, கடற்படைக்கு புதிய தலைமைத் தளபதிகளை அறிவித்தாா். புதிய தளபதிகளின் உத்தரவின் பேரில், ராணுவத்தினா் முரிலோ சதுக்கத்திலிருந்து வெளியேறினா்.

தொடர்ந்து, ஜுவான் ஸுனிகா உள்பட 17 போ் கைது செய்யப்பட்டனா்.  இதனையடுத்து கைது செய்யப்பட்ட ஜுவான் ஸுனிகா இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறும்போது,  “இந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி அதிபா் லூயிஸ் ஆா்சேவின் நாடகம். பொதுமக்களிடையே தன் அரசியல் செல்வாக்கை அதிகரிப்பதற்காக அந்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அவா் தான் கேட்டுக்கொண்டாா்” என தெரிவித்தார்.

இந்த நிலையில்,  அதற்கு மறுப்பு தெரிவித்த அதிபர் லூயிஸ் ஆா்சே செய்தியாளர்களிடம் கூறும் போது,  “ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் எனக்கும் தொடா்பு இருப்பதாக பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜுவான் ஜோஸ் ஸுனிகா கூறுவது பொய்யான தகவல்.  அந்த நடவடிக்கையை அவா் தன்னிச்சையாகத்தான் மேற்கொண்டாா்.  மக்களை ரத்தம் சிந்த வைத்து அதன் மூலம் அரசியல் ஆதாயம் பெறும் மிக மோசமான அரசியல்வாதி நான் இல்லை” என்றாா்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.