பாபி சிம்ஹா நடிக்கும் முத்ரா ஃபிலிம் ஃபேக்டரி வழங்கும் ‘தடை உடை’ படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.
ரேஷ்மி மேனன் தயாரிப்பில், முத்ரா ஃபிலிம் ஃபேக்டரி வழங்கும் புதிய படத்திற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. முத்ரா ஃபிலிம் ஃபேக்டரி தயாரிக்கும் மூன்றாவது படத்தின் பெயர் தடை உடை. இந்த படத்தில் பாபி சிம்ஹா நடிக்க உள்ளார். இதில் துடிக்கும் கரங்கள் படத்தில் நடித்த நரங் மிஷா, பாபி சிம்ஹாவிற்கு ஜோடியாக நடிக்கிறார்.
இவன் வேற மாதிரி படத்தின் இயக்குனர் எம்.சரவணன், சூது கவ்வும் படத்தின் இயக்குநர் நலன் குமாரசாமி, கட்டப்பாவ காணோம் படத்தின் இயக்குனர் மணி செய்யோன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த ராகேஷ் தடை உடை படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கிறார்.
கணேஷ் பாபு இயக்கத்தில் வெளியாக உள்ள கருவறை என்ற குறும்படத்தின் இசைக்காக சமீபத்தில் ஸ்ரீகாந்த் தேவாவிற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தடை உடை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டரை பார்க்கும்போது கோயில் திருவிழாவை மையமாக வைத்து கதை அமைக்கப்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.







