29.7 C
Chennai
May 20, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

எதிர்க்கட்சிகள் ஓரணியில் இணைந்து விடக்கூடாது என்பதே பாஜகவின் நோக்கம் : முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி!

எதிர்க்கட்சிகள் ஓரணியில் இணைந்து விடக்கூடாது என்பதே பாஜகவின் நோக்கம் என  முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவிததுள்ளார். 

இதுதொடர்பாக இந்துஸ்தான் டைம்ஸ் (12-08-2023) ஆங்கில நாளேட்டிற்கு முதலமைச்சர மு.க.ஸ்டாலின் நேர்காணல் அளித்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கேள்வி : மக்களவையில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்போது பேசிய பிரதமர் எதிர்க்கட்சிகளின் கூட்டணியை சந்தர்ப்பவாத, அகங்காரக் கூட்டணி என்று விமர்சித்துள்ளார். நடப்பு கூட்டத்தொடரில் பல மசோதாக்கள் போதிய விவாதமின்றி, எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கிடையே நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. பிற பாஜக அமைச்சர்களும் எதிர்க்கட்சிகளின் கூட்டணியைப் பொறுப்பில்லாத கூட்டணி என விமர்சித்துள்ளனர். இது குறித்த உங்கள் கருத்து?

பதில் : பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் எதிர்க்கட்சிகளால் கொண்டு வரப்பட்டது. மூன்று நாட்களாக பாஜக அரசு மீதும், குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. அது எதற்குப் பதிலும் சொல்லவில்லை பிரதமர். மாறாக, தேர்தல் மேடைகளில் பேசுவதைப் போல காங்கிரஸ் கட்சியை விமர்சித்து பேசிக் கொண்டு இருந்தார்.

2014 தேர்தலுக்கு முன்னதாக அவர் காங்கிரஸ் கட்சி மீது என்ன குற்றச்சாட்டு வைத்தாரோ, அதே குற்றச்சாட்டை 9 ஆண்டுகளுக்குப் பிறகும் வைத்துக் கொண்டு இருந்தார். பாஜக அமைச்சர்கள் சிலரே கொட்டாவி விட்ட காட்சிகளை நேரலையில் பார்க்க முடிந்தது.  பிரதமர் உரையை யாராவது எடுத்து முழுமையாகப் படித்தால், இது காங்கிரஸ் ஆட்சி மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து ‘எதிர்க்கட்சித் தலைவர்’ மோடி பேசுவதைப் போல இருக்கும். பாஜக ஆட்சியை ஒரு வாக்கில் கவிழ்த்த கட்சி அதிமுக. அந்தக் கட்சிக்கு எதிராகத் தான் 2009, 2014 நாடாளுமன்றத் தேர்தல்களில் வாக்கு கேட்டார் மோடி. இப்போது அதிமுகவை அருகில் வைத்திருப்பதை விட சந்தர்ப்பவாதம் இருக்க முடியுமா?

கேள்வி : ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது பேசுகையில், 1989-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஜெயலலிதாவின்  சேலை இழுக்கப்பட்டதாகக் கூறி, பெண்கள் பாதுகாப்பு தொடர்பாகத் தி.மு.க.வை நேரடியாகத் தாக்கிப் பேசியிருக்கிறார். உங்களது பதில் என்ன?

பதில் : நிர்மலா சீதாராமன் ஏதாவது வாட்ஸ் அப் வரலாற்றைப் படித்து விட்டுப் பேசுவார். ஜெயலலிதாவுக்குத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை. அது அவராக நடத்திக் கொண்ட நாடகம் என்பதை அப்போது அவையில் இருந்த அனைவரும் அறிவார்கள். இப்படி சட்டமன்றத்தில் செய்ய வேண்டும் என்று முன்னதாகவே தனது போயஸ் கார்டன் வீட்டில் வைத்து ஜெயலலிதா ஒத்திகை பார்த்தார் என்றும், அப்போது நான் உடனிருந்தேன் என்றும் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசு (இப்போதைய திருச்சி காங்கிரஸ் எம்.பி) சட்டமன்றத்திலேயே பேசி அதுவும் அவைக் குறிப்பில் உள்ளது. எனவே தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்வைப் பொய்யாகத் திரித்து நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் பேசியது வருந்தத்தக்கது, அவையைத் தவறாக வழிநடத்துவது.

கேள்வி : தமிழ்நாடு ஆளுநருக்கும் உங்களுக்குமான மோதல் அவர் அமைச்சர் செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கிக் கடிதம் எழுதியதில் தீவிரமடைந்தது. அவரைத் திரும்பப் பெற வைக்க நீங்கள் குடியரசுத் தலைவருக்கே கடிதம் எழுதினீர்கள். சட்ட ஆலோசனை பெற வேண்டி, தனது கடிதத்தை அவர் நிறுத்தி வைத்துள்ளார் என்றபோதிலும், தமிழ்நாடு அரசாங்கத்தில் அவர் எத்தகைய பாத்திரத்தை ஏற்றுள்ளார்?

பதில் : மோடி, குஜராத் மாநில முதலமைச்சராக இருந்தபோது, ‘குஜராத் ஆளுநர் மாளிகை என்பது காங்கிரஸ் கட்சி அலுவலகம்’ என்று குற்றம் சாட்டினார். இன்றைய ஆளுநர் மாளிகைகள், பாஜக அலுவலகங்களாக மாற்றப்பட்டு இருக்கின்றன. ‘எனக்கு அதிகாரம் இல்லை’ என்று சொல்லிக் கொள்ளும் ஆளுநர் ஆர்.என்.ரவி, அதிகாரத்தை மீறிச் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார். ‘எனக்கு வேலையே இல்லை’ என்று சொல்லிக் கொள்ளும் ஆளுநர் ரவி, வேண்டாத வேலைகளை மட்டுமே பார்த்துக் கொண்டு இருக்கிறார்.

கேள்வி : செந்தில்பாலாஜி அதிமுக ஆட்சியின்போது ஊழல் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் அவரை அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டீர்கள். அது ஏன்? தற்போது உச்சநீதிமன்றமே அவரைக் கைது செய்ததிலு, அமலாக்கத்துறை விசாரிப்பதிலும் தவறில்லை என்று கூறியுள்ளது. பிறகு ஏன் அமைச்சராகத் தொடர அனுமதிக்கிறீர்கள்?

பதில் : பாஜக தனது அரசியல் எதிரிகளைப் பழிவாங்க இது போன்ற விசாரணை அமைப்புகளை வைத்துள்ளது. இது பொத்தாம் பொதுவான குற்றச்சாட்டு அல்ல. இதற்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து உதாரணங்களை சொல்ல முடியும். பாஜகவின் அரசியல் எதிரிகளின் வீடுகளுக்குள் மட்டுமே இந்த அமைப்புகள் போகும். அப்படி விசாரிக்கப்பட்ட நபர்கள், பாஜகவில் ஐக்கியம் ஆனால், அவர்கள் புனிதமாகி விடுவார்கள். வழக்குகளில் இருந்து தப்பிக்கலாம். இத்தகைய வாஷிங் மிஷினாகத்தான் இவை இருக்கின்றன. எனவேதான் இவர்களது கைதுகளை ‘குற்ற விசாரணைகள்’ என நாங்கள் பார்க்கவில்லை. ‘அரசியல் விசாரணைகள்’ ஆகத் தான் பார்க்கிறேன்.அரசியல் வழக்கில் கைதானவர்களுக்கு தரப்படும் சலுகையே செந்தில்பாலாஜிக்கும் தரப்பட்டுள்ளது.

கேள்வி : கூட்டாட்சி வடிவத்தையும், கூட்டுறவுக் கூட்டாட்சியியலையும் ஒன்றிய அரசு சிதைக்கிறது என சி.பி.ஐ., அமலாக்கத்துறை நடவடிக்கைகளை வைத்து நீங்கள் கூறுவது ஏன்? எதிர்க்கட்சிகளின் கூட்டணி இதைத் தடுத்து நிறுத்துமா? எதிர்க்கட்சிகள் எல்லாம் இணையும்போது எவை முக்கியமானவையாகக் கருதப்படும்?

பதில் : பாஜகவுக்கு எதிராக உள்ள கட்சிகள் ஒரே அணியாக ஆகிவிடக் கூடாது என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது. அனைவரும் பிரிந்து நின்றால்தான் பாஜகவுக்கு லாபம். எனவேதான் அனைவரையும் ஒன்று சேர்க்காமல் இருக்கவே இது போன்ற (சி.பி.ஐ, ஈ.டி) ரெய்டுகள் செய்யப்படுகின்றன. அச்சுறுத்துவது, பயமுறுத்துவதுதான் இந்த ரெய்டுகளின் நோக்கமாகும்.

கேள்வி : நரேந்திர மோடியைத் தங்கள் பிரதமர் வேட்பாளராக பா.ஜ.க முன்னிறுத்தியது கடந்த தேர்தல்களில் பா.ஜ.க.வுக்கு சாதகமாக அமைந்த நிலையில், எதிர்க்கட்சிகள் தங்களுடைய பிரதமர் முகம் யார் எனக் கூறித் தேர்தலை எதிர்கொள்ளுமா?

பதில் : நரேந்திர மோடி என்ற பிம்பம் இன்று தகர்ந்துவிட்டது. எனவே, அவர் முகத்தை மட்டும் காட்டி பாஜகவால் வெற்றி பெற முடியாது. அதனால்தான் 39 கட்சிகளைக் கூட்டி வைத்து அவர் போஸ் கொடுத்தார். ஏன், அவர் தன் இமேஜை நம்பவில்லை? காங்கிரஸையும் ராகுலையும் தி.மு.க.வையும் மற்ற எதிர்க்கட்சிகளையும் மோடி விமர்சித்துப் பேசுவது இதனால்தான்.

கேள்வி : பொது சிவில் சட்டம் பற்றிய உங்கள் பார்வை என்ன? தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுடன் கூட்டணியில் உள்ள அ.தி.மு.க.வும் இதனை எதிர்த்துள்ளது. கிரிமினல் சட்டம் நாடெங்கும் ஏற்கனவே பொதுவாக உள்ள நிலையில் பிறவற்றிலும் பொது சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் என்ன சிக்கல்?

பதில் : குற்றவியல் சட்டத்தையும், பொது சிவில் சட்டத்தையும் ஒன்றாக நீங்கள் பார்ப்பதே தவறு. குற்றவியல் சட்டம் என்பது குற்றம் தொடர்பானது. ஒரு குற்றம் செய்தால் அதற்கான தண்டனை அனைவருக்கும் பொதுவானதே. அதில் யாருக்கும் ஆட்சேபனை இல்லை.ஆனால் பொது சிவில் சட்டம் என்பது பண்பாட்டு, கலாச்சாரம், பழக்க வழக்கங்களில் கை வைக்கிறது. இந்தியாவில் பல்வேறு பண்பாடு, கலாச்சார, பழக்க வழக்கங்களை பின்பற்றும் மக்கள் வாழ்கிறார்கள். எனவே இங்கு பொது சிவில் சட்டம் பொருந்தாது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் பல்வேறு பழங்குடி சமூகங்கள், சிறுபான்மையினருக்குத் தனிச் சலுகைகள் வழங்கி இருக்கிறது. அவர்கள் பொது சிவில் சட்டம் என்று கூறப்படுவதை எதிர்க்கிறார்கள்.

காசி ஹில்ஸ் என்ற தன்னாட்சி பெற்ற மாவட்ட கவுன்சில் இதனை எதிர்த்துள்ளது. காசி சமூகத்தின் பழக்க வழக்கங்கள் பாதிக்கப்படும் என்கிறார்கள் இவர்கள். அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையில் சிறப்பு சலுகை பெற்றிருக்கும் சமூகம் இது. எனவே, பொது சிவில் சட்டமானது, இந்தியாவின் பொது அமைதியையும் இணக்கத்தையும் சீர்குலைத்துவிடும் சட்டம் ஆகும்.

கேள்வி :தமிழ்நாடு அரசு முதலீடுகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. நீங்களும் பல மாவட்டங்களில் தொழில் மையங்களை அமைத்து வருகிறீர்கள். வெளிநாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டீர்கள். இந்திய பொருளாதாரத்தில் தற்போது மந்தநிலை உள்ள சூழலில், நாட்டில் முதலீட்டுச் சூழல் எப்படி இருப்பதாகக் கருதுகிறீர்கள்?

பதில் : தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் அப்படி எந்த மந்தநிலையும் இல்லை என்றே சொல்வேன். அப்படி நினைத்திருந்தால் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டைச் சென்னையில் வரும் ஜனவரி மாதம் கூட்டி இருக்க மாட்டோமே. இதற்கு அழைப்பு விடுக்க ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு நான் சென்றிருந்தேன். அங்கு நான் சந்தித்துப் பேசிய முதலீட்டாளர்கள் பலரும், தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஆர்வமாக இருந்தார்கள். அமைதியான மாநிலம், சிறந்த உள்கட்டமைப்பு உள்ள மாநிலம் எனத் தமிழ்நாட்டை நினைக்கிறார்கள்.

இந்த வாரம் கூட, கோத்ரெஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்ஸ் நிறுவனத்தின் உற்பத்தி ஆலையை செங்கல்பட்டில் நிறுவும் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுள்ளோம். 515 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாகும் ஆலை அது. மிட்சுபிசி எலக்ட்ரிக் நிறுவனம் 1,891 கோடி ரூபாய் முதலீட்டில் ஏ.சி இயந்திரங்கள் மற்றும் காற்றழுத்தக் கருவிகள் உற்பத்தி ஆலைகள் அமைக்க கடந்த மே 9 அன்று ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் அடுத்த பத்து ஆண்டுகளில் 20,000 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கான ஒப்பந்தம் மே 11-ஆம் தேதி கையெழுத்தானது. பொன்னேரியில் மஹிந்திரா ஒரிஜின்சில் புதிய ஆலையை அமைப்பதற்கான பணிகளை ஓம்ரான் நிறுவனம் தொடங்கியுள்ளது. கடந்த மூன்று மாதத்தில் தொடங்கப்பட்ட ஒரு சில நிறுவனங்கள் இவை. எனவே நீங்கள் சொல்லும் மந்த நிலைமை நம் மாநிலத்துக்கு இல்லை.

கேள்வி :ஆகஸ்ட் 10 அன்று நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய பிரதமர் அவர்கள், மணிப்பூரில் விரைவில் அமைதி திரும்பும் என்று நம்பிக்கை தெரிவித்ததுடன், நாடு அவர் பக்கம் இருப்பதாகவும் பேசியுள்ளார். அவரது இந்த உறுதியை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள். மணிப்பூரில் தொடரும் வன்முறைக்குத் தீர்வுகாண நீங்கள் சொல்லும் வழி என்ன?

பதில் : பாஜகவின் பிளவுவாத வெறுப்பரசியல் தான் மணிப்பூர் பற்றி எரிவதற்குக் காரணம். இரண்டு பிரிவினருக்கு இடையில் பிளவை ஏற்படுத்தி அவர்களை ஆயுதம் ஏந்த வைத்தது பாஜகவின் மதவாத அரசியல் ஆகும். இன்று அவர்கள் அடக்க முடியாத அளவுக்கு கைமீறிப் போய்விட்டது. மணிப்பூரில் இப்படி நடக்கும் என்பது அந்த மாநிலத்தை ஆளும் பாஜக அரசுக்கும் தெரியும். ஒன்றிய பாஜக அரசுக்கும் தெரியும். ஆனால் இவ்வளவு பெரிதாக நடக்கும் என்று அவர்கள் கணிக்கவில்லை. வன்முறை இருபக்கமும் கூர்மையான ஆயுதம். ‘பூதத்தை உருவாக்கினால், அந்த பூதம் உருவாக்கியவனேயே தாக்கும்’ என்பார்கள். அதுதான் மணிப்பூரில் நடக்கிறது.

மணிப்பூரில் அமைதி திரும்ப வேண்டுமானால் முதலில் அந்த மாநிலத்தை ஆளும் பாஜக அரசு மீது நடவடிக்கை எடுத்தாக வேண்டும். அனைத்துப் பிரிவினருக்கும் பொதுவானவர்கள் தான் நாங்கள் என்பதை ஒன்றிய அரசு நிரூபிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களைப் போய் பிரதமர் பார்க்க வேண்டும். அங்கே ஊர் ஊராக மக்களைச் சந்திக்க வேண்டும். சாதாரணமாக அங்கு அமைதி திரும்பி விடாது. இத்தனை நாட்களாக எரியும் தீயில் எண்ணெய் ஊற்றும் செயல்களைச் செய்துவிட்டு, அவ்வளவு சீக்கிரம் அதனை அணைத்து விட முடியாது.

கேள்வி :பாஜக தமிழ்நாட்டின் மீது கவனம் செலுத்துவதைப் பிரதமரின் சமீபத்திய பேச்சுகளில் நன்கு காண முடிகிறது. மாநில அரசியலில் அ.தி.மு.க.வுக்குப் பதிலாக பா.ஜ.க உங்களது முதன்மை எதிர்க்கட்சியாக வர வாய்ப்புண்டா? இல்லை என்றால், ஏன்?

பதில் : நல்ல நகைச்சுவையான செய்தி இது. பிரதமரிடம் எவ்வளவு பொய் சொல்லி வைத்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது. பிரதமருக்குத் தமிழ்நாட்டைப் பற்றியும் தெரியவில்லை. தமிழக பாஜகவைப் பற்றியும் தெரியவில்லை என நினைக்கிறேன்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading