முக்கியச் செய்திகள் இந்தியா

மீண்டும் துளிர்க்கிறதா பாஜக, சிவசேனா(உத்தவ் தாக்ரே) நட்பு?…

மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பமாக குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு ஆதரவு அளிக்க உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனா பிரிவு முடிவு செய்துள்ளது.

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்ரேவுக்கு எதிராக சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கியதால் அவரது தலைமையிலான அரசு கவிழ்ந்து, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான புதிய அரசு அமைந்தது. பாஜக, ஏக்நாத் ஷிண்டே பிரிவு சிவசேனா இணைந்து அமைத்த கூட்டணி அரசு சமீபத்தில் தனது பெரும்பான்மையை சட்ப்பேரவையிலும் நிரூபித்தது. இந்த திடீர் திருப்பம் ஏற்படுத்திய பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் அம்மாநில அரசியலில் ஒரு அதிரடி திருப்பம் அரங்கேறியுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக களம் இறங்கியுள்ள, திரௌபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவிக்க உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனா பிரிவு முடிவு செய்துள்ளது. உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனா கூட்டணி அமைத்துள்ள தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இணைந்து யஷ்வந்த் சின்ஹாவை பொது வேட்பாளராக குடியரசு தலைவர் தேர்தலில் களம் இறக்கியுள்ளன. அவருக்குதான் சிவசேனா எம்.பிக்கள் 18 பேரின் ஆதரவு இருக்கும் என்று கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் சிவசேனா எம்.பிக்கள் கூட்டம் நடைபெற்றது. 16 எம்.பிக்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் பெரும்பாலானோர்,  திரௌபதி முர்முவுக்கே ஆதரவு தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்திய நிலையில், குடியரசு தலைவர் தேர்தலில் திரௌபதி முர்முவுக்கு ஆதரவு அளிக்க  உத்தவ் தாக்ரே முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. பாஜகவுடன் மீண்டும் கூட்டணியை புதுப்பிக்க வேண்டும் என கடந்த சில நாட்களாக  உத்தவ் தாக்ரேவை அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வந்த நிலையில், குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவளிக்க உத்ததவ் தாக்ரே சிவசேனா பிரிவு முடிவு செய்துள்ளது குறிப்பிடதக்கது. மகாராஷ்டிர சட்டப்பேரவையில் சிவசேனா எம்.எல்.ஏக்களிடையே ஏற்பட்ட பிளவைப்போல் அக்கட்சி எம்.பிக்களிடையேயும் பிளவு ஏற்படுவதை தடுக்கவும் இந்த முடிவுக்கு உத்தவ் தாக்ரே வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதே நேரம் திரௌபதி முர்மு பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண் என்பதால் குடியரசு தலைவர் தேர்தலில் அவருக்கு  ஆதரவு அளிக்க சிவசேனா முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் கூறினார். திரௌபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவிப்பதால் பாஜகவிற்கு தாங்கள் ஆதரவளிப்பதாக அர்த்தம் இல்லை என்றும் சஞ்சய் ராவத் கூறினார். எம்.பிக்கள் கூட்டத்தில் திரௌபதி முர்முவுக்கு ஆதரவு அளிக்க தீர்மானிக்கப்பட்டாலும், இது குறித்த இறுதி முடிவை உத்தவ் தாகேரதான் எடுத்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்றும் சஞ்சய் ராவத் கூறினார்.

எனினும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவளிக்கும் இந்த முடிவை சிவசேனா (உத்தவ்தாக்ரே பிரிவு)  கூட்டணி கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மகாராஷ்டிரா காங்கிரஸ் மூத்த தலைவர் சஞ்சய் நிரூபம், பாஜக வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க சிவசேனா எம்.பிக்கள் முடிவு செய்திருப்பது அக்கட்சியில் உட்கட்சி ஜனநாயகம் முடிவுக்கு வந்துள்ளதை சுட்டிக்காட்டுவதாகக் கூறினார். முன்பெல்லாம் பால்தாக்ரே உத்தரவிடுவார் அதனை சிவசேனா எம்.பிக்கள் பின்பற்றுவார்கள். ஆனால் தற்போது எம்.பிக்கள் உத்தரவு போடுகிறார்கள் சிவசேனா அதனை பின்பற்றி செல்கிறது என்றும் சஞ்சய் நிரூபம் விமர்சித்தார்.

மகாவிகாஸ் அகாதி கூட்டணியிலிருந்து சிறிது சிறிதாக விலகி பாஜகவுடன் உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனா பிரிவு நெருக்கம் காட்டி வருவதாக உலா வரும் யூகங்களுக்கு வலு சேர்க்கும் விதமாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்த கருத்து ஒன்றும் அமைந்துள்ளது. கடந்த மாதம் 28ந்தேதி மகாராஷ்டிர முதலமைச்சராக உத்தவ் தாக்ரே தலைமையேற்று நடத்திய கடைசி அமைச்சரவைக் கூட்டத்தில், ஔரங்காபாத் நகரின் பெயரை சம்பாஜிஎ நகர் என்றும், ஓஸ்மநாபாத் நகரின் பெயரை தாராசிவ் நகர் என்றும் மாற்ற முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவு எடுக்கப்பட்டு இரண்டு வாரங்கள் கழித்து தனது அதிருப்தியை தற்போது வெளிப்படுத்தியுள்ளார் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார். இது உத்தவ் தாக்ரே தன்னிச்சையாக எடுத்த முடிவு என அவர் தனது கண்டனத்தை  தெரிவித்துள்ளார். மகாவிகாஸ் அகாதி கூட்டணி அமைந்தபோது அதன் குறைந்த பட்ச செயல் திட்டத்தில் இது போன்ற முடிவு எடுக்கப்படவில்லை என்றும் சரத்பவார் கூறியுள்ளார்.

பெயர் மாற்றம் நிகழ்ந்து இரண்டு வாரங்களுக்கு பின்னர் திடீரென இவ்வாறு விமர்சித்திருப்பது மகாவிகாஸ் கூட்டணியில் ஏற்பட்டுள்ள விரிசலின் அறிகுறியாக பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் குடியரசு தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு ஆதரவு அளிக்க உத்தவ் தாக்ரே சிவசேனா பிரிவு முடிவு செய்திருப்பது பாஜகவுடன் உத்தவ் தாக்ரே மீண்டும் நெருங்கி வருகிறாரா என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மற்றும் ஒருங்கிணைந்த சிவசேனா கூட்டணி அமைத்து மொத்தம் உள்ள 48 இடங்களில் 41 இடங்களை கைப்பற்றியது. இந்நிலையில் 2024 நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் அதே போன்ற வெற்றியை ஈட்ட வகுக்குக்கப்படும் வியூகங்களின் வெளிப்பாடாக இரு கட்சிகளும் மீண்டும் நட்பு பாராட்டினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என மகாராஷ்டிரா அரசியலை உற்று நோக்கும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

-எஸ்.இலட்சுமணன் 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram