மதக்கலவரம் செய்ய திட்டமிடுபவர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த பலர், எல்.முருகன் முன்னிலையில் இன்று தங்களை பாஜகவில் இணைத்துக்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முருகன், தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் பாஜக சார்பில் மத்திய பட்ஜெட் விளக்கக் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளதாகக் கூறினார். தமிழ்நாட்டின் நலன் கருதி, மாநிலத்துக்கு அதிக திட்டங்கள், நிதி ஒதுக்கீடு போன்றவை பட்ஜெட்டில் தரப்பட்டுள்ளதாகவும், இதை ஏற்றுக்கொள்ள எதிர்க்கட்சிகளுக்கு மனமில்லை என்றும் முருகன் குற்றம்சாட்டினார்.
தேர்தல் நேரம் என்பதால் இது தேர்தலுக்கான பட்ஜெட் என்று எதிர்க்கட்சிகள் பேசுவதாகக் கூறிய அவர், சென்னை – சேலம் விரைவுச்சாலை உட்பட பல்வேறு நெடுஞ்சாலைகளுக்கான திட்டங்கள், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு என்று மாநிலத்தின் நலன் கருதியே பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்தார்.
எந்த மதத்தையும், தனி நபரையும் கொச்சைப்படுத்தக் கூடாது என்று பேசிய எல்.முருகன், பாஜக எந்த மதத்துக்கும் எதிரான கட்சி அல்ல என்றும், மதக்கலவரம் செய்ய திட்டமிடும் நபர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பேசினார். சசிகலா வந்தால் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுமா என்ற கேள்விக்கு எல்.முருகன், சசிகலா தமிழ்நாடு வந்த உடன் பார்க்கலாம் என்று பதிலளித்தார்.







