மயிலாடுதுறை அருகே போக்சோ சட்டத்தில் கைதான பாஜக பிரமுகரின் மகன்கள், புகார் அளித்தவரை கத்தியால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குத்தாலம் பகுதியில் கடந்த 11ஆம் தேதி 5க்கும் மேற்பட்ட சிறுமிகளுக்கு ஆபாச படம் காண்பித்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பாஜகவின் தெற்கு ஒன்றிய செயலாளர் மகாலிங்கம் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், இது தொடர்பாக புகார் அளித்த சிறுமியின் தந்தைக்கு, மகாலிங்கம் குடும்பத்தினர் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
இதனால், மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்ற சிறுமியின் தந்தையை, மகாலிங்கத்தின் மகன்கள் ஜவஹர், சுதாகர் ஆகியோர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கத்தியால் தாக்கியுள்ளனர். மேலும் தடுக்கச் சென்ற சத்யராஜ் என்பவரையும் கத்தியால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார் காயமடைந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், தாக்குதலில் ஈடுபட்ட ஜவஹர், சுதாகர், சுரேஷ்குமார், இளஞ்சேரன் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







