பில்கிஸ் பானு வழக்கு: முன்விடுதலை முடிவை திரும்பப் பெற உச்சநீதிமன்றத்தை அணுகிய 6,000 பேர்

2002 பில்கிஸ் பானு வழக்கில் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைக் குற்றவாளிகள் 11 பேரின் முன்விடுதலை முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று அடித்தட்டுத் தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் உட்பட…

2002 பில்கிஸ் பானு வழக்கில் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைக் குற்றவாளிகள் 11 பேரின் முன்விடுதலை முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று அடித்தட்டுத் தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் உட்பட 6,000 பேர் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.

குஜராத் இனப் படுகொலை வழக்கில் கலவரக்காரர்கள், பில்கிஸ் பானு உள்ளிட்ட 17 முஸ்லிம் பெண்களை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு 11 பெண்கள் கொல்லப்பட்டனர். இக்கொடூர கொலைக் குற்றவாளிகள் 11 பேருக்கு 2008 இல் சி.பி.ஐ. நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. 2018 இல் குற்றவாளிகளின் ஆயுள் தண்டனையை மும்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.

இந்நிலையில் கொலையாளிகள் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என கோரியதை ஏற்றுக்கொண்டு 75 வது சுதந்திர தினம் கொண்டாடுவதை ஒட்டி குஜராத் மாநில பா.ஜ.க. அரசு முன் விடுதலை செய்திருந்தது.

இந்நிலையில், 6,000 பேர் கையெழுத்துட்டு உச்சநீதிமன்றத்திற்கு அனுப்பிய கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கூட்டுப் பலாத்காரம் மற்றும் படுகொலைக்கு தண்டனை விதிக்கப்பட்ட 11 பேரின் தண்டனைகளை நீக்குவது, ‘அமைப்பை நம்புங்கள்’, ‘நீதியைத் தேடுங்கள்’ மற்றும் ‘நம்பிக்கையுடன் இருங்கள்’ என்று பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூறப்படும் நம்பிக்கை வார்த்தைகள் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கும் வகையில் அமையும்.

நீதியின் மீதான பெண்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். இந்த 11 குற்றவாளிகளின் தண்டனைகளை உடனடியாக ரத்து செய்து, மீதமுள்ள ஆயுள் தண்டனையை அனுபவிக்க அவர்களை மீண்டும் சிறைக்கு அனுப்ப வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.