கொரோனா பெருந்தொற்றை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க மக்கள் உதவ வேண்டும் என்று அதிபர் ஜோ பைடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் 245வது பிறந்த தினம் ஜூலை 4ம் தேதி(இந்திய நேரப்படி இன்று)கொண்டாடப்பட்டது. இதையடுத்து வார இறுதி விடுமுறைக்காக தனது பண்ணை வீட்டுக்குச் சென்றிருந்த ஜோபைடன் மீண்டும் வெள்ளை மாளிகை திரும்பினார். அப்போது தெருகளில் கூடியிருந்த அமெரிக்கர்கள் உற்சாகத்துடன் அதிபரை வரவேற்றனர்.
அமெரிக்க பிறந்த தின கொண்டாட்டத்தை முன்னிட்டு வெள்ளை மாளிகையில் ராணுவத்தினரின் குடும்பத்தினர், கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட முன்களப் பணியாளர்கள் என ஆயிரம் பேர் பங்கேற்ற விருந்து நடைபெற்றது.
அப்போது அதிபர் ஜோபைடன் கூறியதாவது:
“இந்த ஆண்டு ஜூலை 4ம் தேதி சிறப்பாக கொண்டாட வேண்டிய தினம். இருட்டில் இருந்து, பெருந்தொற்றின் ஆண்டில் இருந்து , தனிமைப்படுத்திக் கொண்டதில் இருந்து,ஒரு ஆண்டு வலியில் இருந்து, அச்சம், இதயத்தை நொறுக்கும் இழப்புகளில் நாம் மீண்டு வந்திருக்கின்றோம். இதே நாளில் ஒரு ஆண்டுக்கு முன்பு நாம் எங்கு இருந்தோமோ அந்த இடத்தில் மீண்டும் நாம் ஒருபோதும் இருக்கக் கூடாது.
பெருந்தொற்றால் இறந்தோருக்கு என் ஆழ்ந்த இரங்கல். பெருந்தொற்று கால அவசர உதவிக்கு உதவி செய்த அமெரிக்கர்களை வாழ்த்துகின்றேன். புதிய வகை கொரோனா பரவும் சூழலில் அதில் இருந்து தற்காத்துக்கொள்ள சிறந்த வழி தடுப்பூசி மட்டுமே. தடுப்பூசி போட்டுக் கொள்வது நீங்கள் செய்யும் தேசபக்தி மிக்க செயலாகும்.”
இவ்வாறு ஜோ பைடன் உரையாற்றினார்.
அமெரிக்காவில் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ஆறு லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கர்களில் 67 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டிருக்கின்றனர்.







