பாரதியார் மண்டபமான ஆளுநர் மாளிகை தர்பார் அரங்கம்… கல்வெட்டை திறந்து வைத்த குடியரசுத்தலைவர்…!

சென்னை ஆளுநர் மாளிகை தர்பார் அரங்கிற்கு ‘பாரதியார் மண்டபம்’ என பெயர் சூட்டி அதன் கல்வெட்டையும் பாரதியாரின் உருவப் படத்தையும் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு திறந்து வைத்தார்.  சென்னை கிண்டியில் அமைந்துள்ள ஆளுநர்…

சென்னை ஆளுநர் மாளிகை தர்பார் அரங்கிற்கு ‘பாரதியார் மண்டபம்’ என பெயர் சூட்டி அதன் கல்வெட்டையும் பாரதியாரின் உருவப் படத்தையும் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு திறந்து வைத்தார். 

சென்னை கிண்டியில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் அரங்கில் முதலமைச்சர்கள், அமைச்சர்கள், உயர்நீதிமன்ற நீதிபதி போன்ற முக்கிய பதவி ஏற்பு நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த தர்பார் ஹாலுக்கு, ‘மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அரங்கம்’ என புதிய பெயர் சூட்டும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டு பாரதியாரின் பெயரை அந்த அரங்கிற்கு சூட்டினார். பின்னர் அதன் அடையாளமாக மகாகவி பாரதியாரின் திருவுருவப் படத்துடன் கூடிய கல்வெட்டைத் திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவருக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மரத்தினாலான அம்மன் சிலையை நினைவுப் பரிசாக வழங்கினார். மேலும் இருளர் பழங்குடியினத்தை சேர்ந்த பத்மஸ்ரீ விருதுபெற்ற வடிவேல் கோபால் மற்றும் மாசி சடையன் , பாரதியார் பேரன் ஆர்ஜூன் பாரதி , இசையமைப்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் பேராசிரியர் ஞானசம்பந்தர் பாரதியாரின் பெருமை குறித்து உரையாற்றினார். நிகழ்ச்சியின் நிறைவில் பாரதியார் பாடல்களுக்கு மாணவிகள் நடனமாடினர். இத்துடன் நாதஸ்வர இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.