பாமக 35வது ஆண்டு விழா பொதுக் கூட்டத்ததை கடலூர் மாவட்டத்தில் நடத்த அனுமதிக்க முடியாது, விழுப்புரம் அல்லது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடத்திக் கொள்ளலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் வடலூர் பேருந்து நிலையம் அருகே பொது கூட்டம் நடத்த அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிட கூறி பாமக மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி கூறியதாவது:
பொதுக்கூட்டம் நடத்தும் உரிமையை தடுக்க முடியாது. காவல் துறைக்கு உள்ள அச்சத்தையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. மாலை 6 மணி முதல் 8 மணி வரை மட்டுமே கூட்டம் நடத்த வேண்டும். நெய்வேலி போராட்டம் பற்றி பேசக்கூடாது. சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாது என கட்சியினரை வழி நடத்த வேண்டும் கட்சி தலைமை தான் பொறுப்பேற்க வேண்டும் என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறினார்.
இதற்கு பதில் அளித்து வாதிட்ட பாமக தரப்பு, அமைதியான முறையில் தான் பொது கூட்டம் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டதில்லை. போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறி மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
என்.எல்.சி. மட்டுமல்லாமல் மக்கள் பிரச்சினைகள் குறித்தும் பேசுவோம். வடலூர் சந்திப்பில் அனுமதிக்காவிட்டால் குள்ளஞ்சாவடியில் அனுமதிக்க வேண்டும் இவ்வாறு பாமக சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
இதற்கு அரசு தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், என்.எல்.சி. நிர்வாகத்திற்கு எதிராக பாமக போராட்டம் நடத்திய அதே இடத்தில் தற்போது பொது கூட்டம் நடத்த அனுமதி கேட்கிறார்கள்.
வடலூரில் பொது கூட்டம் நடத்த அனுமதி கொடுத்தால் என்.எல்.சி நிர்வாகத்திற்கு எதிராக பேசுவார்கள். மீண்டும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. கடலூர் மாவட்டத்திற்கு வெளியே பொதுகூட்டம் நடத்தினால் அனுமதியளிக்க தயார் என அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, கடலூர் மாவட்டம் வடலூர் பேருந்து நிலையம் அருகே பொது கூட்டம் நடத்த அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிட கூறி பாமக மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன் தொடர்ந்த வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டார்.
இதனை அடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாமக வழக்கறிஞர் கே.பாலு, கடலூரில் தான் கூட்டம் நடத்த திட்டமிட்டதாகவும், வேறு மாவட்டத்தில் நடத்த விருப்பமில்லை. வேறு மாவட்ட காவல்துறையை அணுக மாட்டோம் எனக் கூறினார். மேலும், இந்த உத்தரவை எதிர்த்து பாமக தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.







