முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கியதை முன்னிட்டு பொதுமக்களுக்கு கோவை திமுக இளைஞரணியினர் பிரியாணி மட்டும் லட்டுகள் வழங்கி கொண்டாடினர்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, 2011 – 2016 அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவி வகித்த போது, போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்யவே, அதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நீதிபதி அபய் ஓகா மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மசிஹ் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு இவரது ஜாமீன் மனுவை விசாரித்து வந்தது. இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணையை நிறைவு செய்த உச்சநீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கியதை கொண்டாடும் விதமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள திமுக அலுவலகங்களில் திமுகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். இதன் ஒரு பகுதியாக கோவையில் திமுக இளைஞரணி சார்பாக சிக்கன் பிரியாணி, லட்டு ஆகியவை வழங்கப்பட்டது.




