கட்டுரைகள்

ஆகப்பெரும் வாழ்விற்கு ஆயுத பூஜையும் சகல கலைகளுக்கு சரஸ்வதி பூஜையும்!


சுப்பிரமணியன்

இந்த அண்ட பிருமாண்ட பிரபஞ்சமானது, நமக்கு மட்டும் சொந்தமானதல்ல. மிருகங்கள், புழு, பூச்சிகள் உயிருள்ள மற்றும் உயிரற்ற ஜடங்களுக்குமானது. நமது பண்பாட்டு விழுமியம்.. “தூணிலும், துரும்பிலும் உள்ளான் என் இறைவன்” என்று கூறி நரசிம்ம அவதாரத்தை வரவழைத்த பக்த பிரகலாதன் கதை நாம் அறிந்ததே.

தீமிதிக்கும், திருநீற்றுக்கும் பக்தி பரவசத்தில் பங்கு தரும் பாங்கு இங்கே உண்டு. பணிகளைச் செவ்வனே செய்து, நெறி தவறாது வாழ்ந்து, இறை நாமத்தை இருக்கும் அணைத்திலும் கண்டு, இயற்கையோடு, இறை வழிபாட்டையும் இணைத்து வாழும் கலையை நமது முன்னோர்கள் ஏற்படுத்தித் தந்திருக்கிறார்கள். அவர்கள் நமக்கு “குரு” போன்றவர்கள்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

“தெளிவு குருவின் திருவார்த்தைக் கேட்டல்” என்கிறது திருமந்திரம். கந்தரனுபூதியும் இக்கருத்தை விபரமாக எடுத்துரைக்கிறது.

உயிருள்ள பொருட்கள் உயிரற்றவை அனைத்திலுமே இறை சக்தி பொதிந்துள்ளது. நம்மை வாழ வைப்பது கல்வியும் நாம் செய்யும் தொழிலுமே. இவைகளைக் கடவுளின் பொருட்களாக்கி, கல்வி மற்றும் சகல கலைகளுக்கும் அதிபதியான சரஸ்வதி தேவியையும், ஜீவனத்திற்கு உதவும் சகல கருவிகளையும், நன்றியுடன் வேண்டடுவதே இப்பூஜைகளின் ஐதீகம்.

ஆதிகால மனிதன் கொடிய விலங்குகளிடமிருந்து தப்பியது ஆயுதங்களினால்தான்.

நவீன இப்போதைய வளர்ச்சிகளும் ஆயுத அடிப்படையிலானதுதான். மருத்துவ தளவாடங்கள், விபத்திலிருந்து காப்பது, போக்குவரத்துக்கான வண்டிகள், நாடு பாதுகாப்புக்காக ஏவுகணைகளுக்காக தொழிற்சாலை இயந்திரங்கள், சிறிய கரண்டி முதலான நமக்கு உதவும் கருவிகள் அனைத்தையும் காத்து, அவற்றை மீண்டும் பயன்படுத்த ஏதுவான சூழ்நிலையை இத்தகைய வழிபாட்டு முறைகள் வாய்ப்பினைத் தருகின்றது.

ஆரம்ப காலங்களில் கைவினைக் கலைஞர்களின் விழாவாக மாற்றம் கண்ட இப்பூஜை, நாளடைவில் தத்தம் தொழிலில் பெற்ற வெற்றிகளுக்கு இக்கருவிகளே காரணம் என்பதை ஏற்று, பல்வேறு மக்களாலும் கொண்டாடப்படுகிறது.

கலைமகள் வழிபாட்டிலும் இப்பாரம்பர்யங்கள் கடைபிடிக்கப்படுகின்றன. இப்பூஜை நாளில் ஆயுதங்களை, புத்தகங்களை எடுத்து உபயோகிக்காமல், அடுத்த நாள் வணங்கி, எடுத்து, உபயோகிப்பார்கள். வாழ்க்கையைச் சிறக்க வைக்கும் சிறந்த வழிபாடு இது என்பது நம்பிக்கை.

மகிஷாசுர வதத்திற்கு பயன்பட்டுப் பின்னர் அதை உரியவர்கள் பூஜை செய்து எடுத்துக் கொண்டது மகாபாரதத்தில், தங்கள் ஆயுதங்கள் அனைத்தும் அழியாது திரும்பக் கிடைத்து, பாண்டவர்கள் பூஜைகள் செய்து எடுத்துப் போய், குருஷேத்ரப் போரில் வென்றது, போன்ற புராண கதைகளும் இவ்விழாவிற்கு ஓர் காரணமாய் நிற்கிறது.

இவ்விழாவிற்கு வேவ்வேறு காரணங்கள் இருப்பதாக அறியப்படுகிறது. அதாவது, கலிங்கப்போரால் அசோகர் மன வேறுபாடு கொண்டு, இனி யுத்தம் வேண்டாம் என்கிற முடிவில், ரத்தக் கறை படிந்த ஆயுதங்களைக் துடைத்து பூஜை செய்து அனைவரையும் செய்வித்தார். “ஆயுதம் களைதல்” எனும் பெயரில் வருடந்தோறும் நடந்த இந்த நிகழ்வுகளும், அறுபத்து மூன்று நாயன் மார்களில் போர்க்கலை ஆசானாக இருந்த சிவபக்தர் ஏனாதி நாயனார், இறைவனைச் சேர்ந்த தினமே இவ்விழா எனும் கருத்தும் உள்ளது.

“அகஸ்திய பக்த விலாசம்” எனும் நூல் இது பற்றி தெளிவுபடுத்துகின்றது என்பர்.

பள்ளி, கல்லூரி மற்றும் கலைகள் பயிலும், பயின்ற அனைவரும் தங்கள் பொருட்களை வைத்து பூஜை செய்து சரஸ்வதியை வழிபடுவர். “சரஸ்வதி நமஸ்துப்யம்” எனும் ஒலி எங்கும் கேட்கும். அறிவாற்றலை இன்று அள்ளி வழங்குவதால், கல்விச் சாலைகள், ஆலயங்களில் “வித்யாரம்பம்” எனும் சடங்குகள் பிரசித்தம்.

“சரஸ்” என்றாலே நீர் மற்றும் ஒளியை வழங்குபவள் என்று பொருள். கல்வி மற்றும் கலைகளை வற்றாத ஊற்றாக, ஞான ஒளியாகத் தருபவள். சிவபெருமானால் உருவாக்கப்பட்ட “கச்சபி” எனும் வீணையைக் கையில் வைத்திருப்பவள்.

வீணை, தட்சிணாமூர்த்தியாக இருந்து, நாரதர் போன்றோர்க்கு உபதேசித்தபின், தமது எசகோதரியான கலைவாணி சரஸ்வதிக்கு  அளித்ததாக ஐதீகம். கலை, கல்வி, ஞானம், அறிவாற்றல், பேச்சுத் திறன் அனைத்தையும் வேண்டிப் பெறும் நாளாக இதனைக் குறிப்பிடுவர். பெரியதொரு இதிகாசம் தந்த கம்பர்

“ஆய கலைகள் அறுபத்தி நான்கினையும்,

ஏய உணர்வுக்கும் என்னம்மை

தூய உருப்பளிங்கு போல் வாள் என்

உள்ளத்தினுள்ளே இருப்பளிங்கு வாராது இடர்” என நாற்பதுக்கும் அதிகமான நற்பெயர்கள் கொண்ட சரஸ்வதி பற்றி நம்பிக்கையுடன் கூறுவார்.

ஜோதிட சாஸ்த்திரமும் “சரஸ்வதி யோகம் ” என்பது முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நூல்கள் வாயிலாக சொல்லப்படுகிறது. ரிக் வேதத்தில் மார்கண்டேய புராணத்தில் விஷ்ணு தர்மோத்திர புராணத்தில் குமார சம்பவம் நூலில் இப்படி சக்தி வழிபாடும் , கன்னிமார் வழிபாடும் போற்றப்பட்டிருக்கிறது.

பாட்டுக்கொரு புலவன் பாரதி, கலைவாணி கீர்த்தனைக் கிருதிப் பாடலில், சரஸ்வதி தேவி எங்கெல்லாம் இருப்பாள் என்பதைப் பற்றி ஒரு பட்டியலே தருவார்.

“வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்_

வீணை செய்யும் ஒலியில்

இருப்பாள்-

கொல்லை இன்பம் குலவு கவிதை கூறு பாவலர்

உள்ளத்தில் இருப்பாள்…”

இப்படி அள்ள அள்ளக் குறையாது அடுக்கிக்கொண்டே போய்

இப்படியான கருணைக் கடல் இவள் என்பார்.

“மாணிக்க வீணை ஏந்தும்

மாதேவி கலைவாணி

தேன் தமிழ் சொல் எடுத்து

பாடவந்தோம்” என்று பாடித் துதிக்கும் மகளிர் குரலில் தெரியும் நம்பிக்கை ஒளியே, இந்த விழாக்களின் பயன்களுக்கு அடிநாதம்.

-சுப்பிரமணியன்.

ஆன்மீகவாதி, ஓய்வு பெற்ற ஊழியர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

செஸ் ஒலிம்பியாட் போட்டியை மகாபலிபுரத்தில் நடத்த 8 காரணங்கள் என்ன?

Web Editor

விராட் கோலியின் பார்ம் சூரியகுமார் யாதவின் கான்ஃபிடன்ஸை உடைக்குமா?

Web Editor

அதிமுகவில் இரட்டை தலைமை தொடங்கி ஒற்றை தலைமை கோரிக்கை வரை கடந்து வந்த பாதை

Dinesh A