“ஐந்து நாட்டிக்கல் மைல் தூரத்தில் மீன் பிடிப்பவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும்” – அமைச்சர் பொன்முடி!

கடலில் ஆமைகள் உயிரிழப்பை தவிர்க்க ஐந்து நாட்டிகல் மைல் தூரத்திற்கு விசைப்படகுகளில் மீன்பிடிப்பதை தவிர்க்க வேண்டும் என அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

வனத்துறை அமைச்சர் க.பொன்முடி தலைமையில் சென்னை, தலைமைச் செயலகத்தில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முன்னிலையில் மாநில வன உயிரின வாரியத்தின்
நிலைக் குழு கூட்டம் நடைபெற்றது.

இதில் கடல் ஆமைகள் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இதில் துறையின் செயலாளர் சுப்ரியா சாகு உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் மீன்வளத்துறை, வனத்துறை உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகளும், தன்னார்வலர்களும் கலந்துக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி பேசுகையில்:-

கடல் ஆமைகள் தொடர்பான கருத்தரங்கு மீன்வளத்துறை, கடலோர பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளோடு இணைந்து இக்கூட்டம் நடைபெற்றது. கடற்கரையிலிருந்து 5 நாட்டிகல் மைல்தூத்தில் சாதாரண படகுகள் செல்வதில் பிரச்சனையில்லை. விசைப்படகுகள் மீன்பிடிக்க கூடாது என்று உள்ளது.

விசைப்படகுகள் அதனை தவிர்க்கவேண்டும். அவர்கள் பயன்படுத்தும் தூண்டில்
வளைகளில் சிக்கி ஆமைகள் உயிரிழந்து விடுகின்றன. 1706 கி.மீ கடற்கரை தூரத்தில் 1328 ஆமைகள் உயிரிழந்துள்ளது. கடந்த காலத்தை ஒப்பிடுகையில் இது அதிகம். விதிகளை மீறி ஐந்து நாட்டிக்கல் கிலோ மீட்டர் தூரத்தில் மீன் பிடிப்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும். அப்படி தற்போது வரையும் 208 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு டீசல் மானியம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு மீன்களும். ஆமைகளும் இரு கண்கள் போல. கடல் ஆமைகள் மீது அக்கறைக் கொண்டவர்கள் மீனவர்கள்.

துறைகளோடு மீனவர்களும் ஒன்றிணைந்து ஆமைகளை பாதுகாக்கவேண்டும். தமிழ்நாட்டில் 3 ஆயிரம் விசைப்படகுகள் உள்ளன. கடலூர், நாகப்பட்டினம் சென்னை கடற்கரைப்பகுதிகளில் அதிகளவில் இம்முறை ஆமைகள்
உயிரிந்துள்ளன. ஆமை முட்டைகளை பாதுகாத்து குஞ்சு பொறித்த பின் கடலுக்குள் அனுப்புவதையும் செய்து வருகிறோம்.

மீன்வளம், வனத்துறை, தன்னார்வலர்கள் இணைந்து மீனவர்களுக்கும் இது
தொடர்பான புரிதலை ஏற்படுத்தவுள்ளோம். மீன்வளத்துறை சார்பில் கண்காணிப்பு பணிகளை கண்காணித்து வருகிறார்கள். வாடகை படகில் சென்று மீன்வளத்துறை கண்காணிக்கிறார்கள்.

ஜனவரி முதல் 5 மாதங்களில் ஆமைகள் முட்டையிடுகிறது. முக்கியமாக அம்மாதங்களில் கண்காணிக்க வேண்டும். கடற்கரையோரங்களில் உள்ள விளக்குகளின் காரணமாக ஆமைகள் கரையை நோக்கி வருகிறது. அதனால் அவ்விளக்குகளை அணைக்க உத்தரவிட்டுள்ளோம்” என்றார். தொடர்ந்து  காதித்துறை கொடுக்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு, “அது முதலமைச்சர் எனக்கு கொடுத்துள்ள துறை. அத்துறைகளில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றுள்ளது” என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.