இந்திய அணிக்கு 277 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலிய அணி. பந்துவீச்சை பொறுத்தவரை 10 ஓவர்கள் வீசி 51 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார் முகமது சமி.
உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்தியாவுடன் ஆஸி. அணி ஒருநாள் தொடரில் மோதுகிறது. இதில் முக்கியமான வீரர்கள் அணிக்கு திரும்பியுள்ளார்கள். காயம் காரணமாக தென்னாப்பிரிக்க தொடரில் முக்கிய வீரர்கள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. செப்.22, 24 மற்றும் 27 ஆகிய தேதிகளில் 3 ஒருநாள் போட்டிகள் இந்தியாவில் நடைபெற உள்ளது.
இந்த போட்டிகளில் பாட் கம்மின்ஸ் (கேப்டன்), சீன் அப்பாட், அலெக்ஸ் கைரி, நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஜோஸ் ஹேசல்வுட், ஜோஸ் இங்கிலிஸ், மாட் ஷார்ட், ஸ்பென்செர் ஜான்ஸன், மார்னஸ் லபுஷேன், மிட்செல் மார்ஷ், க்ளென் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டாய்னிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஜாம்பா ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். அஸ்டன் அகர், டிராவிஸ் ஹெட் ஆகியோர் அணியில் இடம்பெறவில்லை. மாட் ஷார்ட், ஸ்பென்செர் ஜான்ஸன் ஆகியோர் முதன்முதலாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில், முதல் 2 ஒரு நாள் போட்டிகளுக்கு ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அவர்களுக்குப் பதிலாக கே.எல்.ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ரவீந்திர ஜடேஜா துணை கேப்டனாக களம் இறங்கினார்.
இந்நிலையில், டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக மிட்செல் மார்ஷ் மற்றும் டேவிட் வார்னர் களம் இறங்கினர். இதில் டேவிட் வார்னர் 53 பந்துகளில் 52 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். இவருக்கு அடுத்ததாக அதிகப்பட்சமாக ஜோஷ் இங்லிஷ் 45 ரன்கள் எடுத்தார். ஸ்டீவன் ஸ்மித் உள்பட அனைத்து பேட்ஸ்மேன்களும் அரைசதத்தை கூட கடக்காமல் பெவிலியன் திரும்பினர்.
இறுதியாக ஆஸ்திரேலிய அணி 276 ரன்கள் எடுத்த நிலையில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியை பொறுத்தவரையில் முகமது சமி 10 ஓவர்கள் வீசி 51 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இதனை அடுத்து இந்திய அணி 277 ரன்களை இலக்கை நோக்கி களம் இறங்கியுள்ளது.







