வெளிநாட்டு மாணவர்களுக்கு ஆஸ்திரேலிய அரசு உச்சவரம்பை நிர்ணயித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் இருந்து சராசரியாக 10 லட்சம் மாணவர்கள் உயர் கல்விக்காக வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். அமெரிக்கா, யூகே, கனடா, ஆஸ்திரேலியா நாடுகளில் உள்ள கல்லூரிகளுக்கு உயர்கல்வி படிக்க செல்கிறார்கள்.
இந்தியாவுக்கு அடுத்தபடியாக சீனா, தென்கொரியா, சவுதி அரேபியா நாடுகளில் இருந்தும் வெளிநாடுகளில் உயர்கல்வி படிக்க செல்கிறார்கள். இந்நிலையில் வெளிநாட்டு மாணவர்கள் உயர்கல்வி படிப்பதற்கு உச்சவரம்பை சில நாடுகள் விதித்துக் கொண்டிருக்கின்றன. அந்தப் பட்டியலில் ஆஸ்திரேலியாவும் இணைந்திருக்கிறது.
ஆஸ்திரேலியா அரசு 2025-ம் கல்வியாண்டில் உயர்கல்வி பயில்வதற்கான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி 2025ம் ஆண்டுக்கு 2,70,000 மாணவர்களுக்கு மட்டுமே அட்மிஷன் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
இந்த கட்டுப்பாடு குறித்து ஆஸ்திரேலிய கல்வியமைச்சர் ஜேசன் கிளார் கூறியதாவது;
“கல்வித் துறையை பணம் சம்பாதிக்கும் இடமாக மாற்றி வருகின்றன. போதிய ஆங்கில அறிவு இல்லாத வெளிநாட்டு மாணவர்களும் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் கல்வித்தரம் குறைகிறது. படிப்புக்காக அல்லாமல் வேலைவாய்ப்பு நோக்கில் வருவோரும் அதிகரித்துவிட்டனர். மேலும், ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டவர் குடியேற்றமும் முன்னேப்போதும் இல்லாத அளவில் அதிகரித்துள்ளது. வீட்டு வாடகை உயர்வு, உள்கட்டமைப்பு வசதி குறைபாடு உள்ளிட்ட பிரச்னைகளும் எழுகின்றன. எனவேதான் வெளிநாட்டு மாணவர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.







