பிருந்தா தேவி ஐ.ஏ.எஸ்-இன் பெயரைப் பயன்படுத்தி வட இந்திய கும்பல் பணம் பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் சில காலமாக உயர் அதிகாரிகளின் பெயரில் போலி கணக்கு தொடங்கப்பட்டு அதன் மூலம், பணம் பறிக்கும் செயலில் ஒரு சிலர் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் தமிழ்நாடு தோட்டக்கலைத் துறையின் இயக்குநர் பிருந்தா தேவி ஐ.ஏ.எஸ்.-யின் பெயரில் போலி வாட்ஸ்அப் அக்கவுண்ட் தொடங்கி, அதிலிருந்து அவருடைய நண்பர்களிடம் பேசி, பணம் பறிக்கும் செயல் அண்மைக்காலமாக நடைபெற்றுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த பிருந்தா தேவி ஐ.ஏ.எஸ்., தான் அதுபோன்று பணம் எதுவும் கேட்கவில்லை என்றும், தன் பெயரைப் பயன்படுத்தி சில பேர் மோசடி செயலில் ஈடுபட்டு வருவதாகவும் கூறியுள்ளார். எனவே, இதனை நம்பி யாரும் பணம் அளித்து ஏமாற வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இதனைத் தடுக்கும் வகையில் காவல் துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை மாநகர காவல் ஆணையர் பெயரிலும் இதுபோன்ற பொய்யான கணக்கு தொடங்கப்பட்டு, அவருக்கு தெரிந்தவர்களிடம் பணம் பறிக்கும் முயற்சி நடைபெற்றது. அவ்விவகாரத்தில் காவல் துறை உடனடி நடவடிக்கை எடுத்தது குறிப்பிடத்தக்கது.
-ம.பவித்ரா








