சென்னை மதுரவாயல் அருகே ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுத்த போது கார்டு சிக்கிக் கொண்டு வெளியே வராததால் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
மேட்டுக்குப்பம் திருவள்ளூர் சாலையில் ஆக்ஸிஸ் வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. இங்கு இரவுப்பணிக்கு சென்ற தனியார் நிறுவன காவலர் வழக்கம் போல் மையத்தை சோதனை செய்துள்ளார். அப்போது ஏடிஎம் இயந்திரம் சேதப்படுத்தப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து அவர் கோயம்பேடு காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தார். இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் இளைஞர் ஒருவர் பணம் எடுப்பது, கார்டு வெளியே வராததால் இயந்திரத்தை உதைத்து சேதப்படுத்துவதும் தெரியவந்தது.இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர். மேலும் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் ஏதும் திருடப்படவில்லை என்பது போலீசார் விசாரணையில் உறுதியாகியுள்ளது.






