ஆசிய விளையாட்டு டி20 கிரிக்கெட் போட்டியில் நேபாளத்தை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் செப்டம்பர் 23ஆம் தேதி தொடங்கியது. அக்டோபர் 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் சீனா, ஜப்பான், இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, ஈரான், கஜகஸ்தான் உள்ளிட்ட 45 நாடுகள் பங்கேற்றுள்ளன.
இந்நிலையில் ஆசிய விளையாட்டு கிரிக்கெட் காலிறுதி போட்டி ஹாங்சோவ் நகரில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். 49 பந்தில் அவர் சதம் அடித்தார். ரிங்கு சிங் 37, ருதுராஜ் கெய்க்வாட், சிவம் துபே தலா 25 ரன்கள் சேர்த்தனர்.
இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 202 ரன்கள் சேர்த்தது.
203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் நேபாளம் களம் இறங்கியது. இந்திய அணியின் அபார பந்து வீச்சு காரணமாக சீரான இடைவெளியில் நேபாள அணியின் விக்கெட்டுகள் சரிந்தன. இதன் காரணமாக 20 ஓவர்களில் 9 விக்கெட் இழந்த நேபாள அணி 179 ரன்களை மட்டுமே சேர்த்தது. 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது. இந்திய தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.







