ராஜஸ்தான் காங்கிரசில் முதலமைச்சர் அசோக் கெலாட்டிற்கும், முன்னாள் மத்திய அமைச்சர் சச்சின் பைலட்டிற்கும் இடையே இருந்த மோதல் முடிவுக்கு வந்துள்ளது. நீண்ட நாளைக்கு பின்னர் இருவரும் இணைந்து இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.
காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆளும் இரண்டு மாநிலங்களில் ஒன்றான ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் மற்றும் அம்மாநில காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் சச்சின் பைலட் ஆதரவாளர்களிடையே நீடித்துவந்த மோதல் கட்சித் தலைமைக்கு பெரும் தலைவலியாக இருந்து வந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தல் அறிவிப்பு வெளியான சமயத்தில் இந்த மோதல் உச்சக்கட்டத்தை எட்டியது. அந்த மோதலின் அனல் இன்னும் தணியவில்லை என்பது போல் கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் அளித்த பேட்டி ஒன்று அமைந்தது. சச்சின் பைலட் ஒரு துரோகி என்றும் அவரால் ராஜஸ்தான் முதலமைச்சராக ஒருபோதும் ஆக முடியாது என்று அசோக் கெலாட் தெரிவித்தார். அவரது இந்த கருத்து சச்சின் பைலட் ஆதரவாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்பட்டது.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக இரு தரப்பிற்கும் இடையே சமரசம் ஏற்பட்டதன் அடையாளமாக முதலமைச்சர் அசோக் கெலாட்டும், சச்சின் பைலட்டும் ஒன்றாக இணைந்து ஜெய்ப்பூரில் செய்தியாளர்களை சந்தித்தனர். ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை ராஜஸ்தானிற்கு வருவதை முன்னிட்டு நடைபெற்ற இந்த சந்திப்பில் பேசிய இரு தலைவர்களும் தங்களுக்கிடையே எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறினர். ராஜஸ்தான் காங்கிரசில் தற்போது பிளவு இல்லை என்றும் ஒரே அணியாக இருப்பதாகவும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்தார். தாமும், சச்சின் பைலட்டும் கட்சியின் இரு சொத்துக்கள் என ராகுல்காந்தி கூறியதை சுட்டிக்காட்டி பத்திரிக்கையாளர் சந்திப்பில் நெகிழ்ந்தார் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்.







