பிபர்ஜாய் புயல் வரும் 15ஆம் தேதி கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், குஜராத் கடலோர மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி பிபர்ஜாய் புயலாக உருவெடுத்தது. இந்த புயல் போர்பந்தருக்கு 340 கிலோ மீட்டர் தெற்கு, தென்மேற்கிலும், துவாரகாவுக்கு 400 கிலோ மீட்டர் தெற்கு-தென்மேற்கிலும் அதிதீவிர புயலாக மையம் கொண்டு உள்ளது. இந்த புயல் மாண்ட்வி கராச்சி இடையே வரும் 15ஆம் தேதி கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து குஜராத் மாநிலத்தில் மழை தீவிரம் அடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கட்ச், தேவபூமி, துவாரகா, ஜாம்நகர், போர்பந்தர், ராஜ்கோட், மோர்பியில் கன முதல் மிக கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சௌராஷ்டிரா மற்றும் கட்ச் கடற்கரையை ஒட்டி, மணிக்கு 50-60 கிமீ வேகத்தில் வீசும் காற்றின் வேகம் அடுத்த 24 மணி நேரத்திற்கு தொடரும் என்றும், ஜூன் 14 ஆம் தேதி காலை காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது. ஜூன் 15 ஆம் தேதி கட்ச்,தேவபூமி துவாரகா, போர்பந்தர், ஜாம்நகர், ராஜ்கோட், ஜுனகர் மற்றும் மோர்பி மாவட்டங்களில் மணிக்கு 125-135 கிமீ வேகத்தில் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனையடுத்து கடலோர மாவட்டங்களான கட்ச், போர்பந்தர், தேவபூமி துவாரகா, ஜாம்நகர், ஜூனாகத் மற்றும் மோர்பி ஆகிய மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.






