அரவிந்த் கெஜ்ரிவால் கைது | இந்தியா கூட்டணி தக்க பதிலடி கொடுக்கும் -ராகுல் காந்தி

அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு இந்தியா கூட்டணி தக்க பதிலடி கொடுக்கும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.   டெல்லியில் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதலமைச்சர் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை, விசாரணைக்கு…

அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு இந்தியா கூட்டணி தக்க பதிலடி கொடுக்கும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.  

டெல்லியில் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதலமைச்சர் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை, விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை 9 முறை சம்மன் அனுப்பியது. ஆனால், அமலாக்கத்துறையின் சம்மன் சட்ட விரோதமானது என்று கூறி அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராக மறுத்து வந்தார்.

இதற்கிடையில் 12 அதிகாரிகள் கொண்ட அமலாக்கத்துறை குழுவினர், நேற்று கெஜ்ரிவாலின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கெஜ்ரிவாலை அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து கெஜ்ரிவால், இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

எதிர்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியைச் சேர்ந்த முக்கிய தலைவர்களில் ஒருவரான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்திருப்பது தேசிய அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீதான கைது நடவடிக்கைக்கு பல்வேறு எதிர்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அதன்படி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவிக்கையில் , பயம் கொண்ட சர்வாதிகாரிகள் ஊடகங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களையும் கைப்பற்றுவது, கட்சிகளை உடைப்பது, நிறுவனங்களை மிரட்டி பணம் பறிப்பது, எதிர்க்கட்சியின் கணக்கை முடக்குவது மட்டுமன்றி தற்போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்களையும் கைது செய்வது சாதாரண விசயமாகி விட்டது. இதற்கு இந்தியா கூட்டணி தக்க பதிலடி கொடுக்கும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.