இந்த வாரம் கணேஷ்விநாயகன் இயக்கத்தில் அருள்நிதி நடித்த அருள்வான், பாரிஇளவழகன், ரம்யாரங்கநாதன் நடித்த அன்பே டயானா, கிறிஸ்டோபர் நோலனின் தி ஒடிஸி படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளன. இந்த படங்களின் மினி ரிவியூ இதோ
அருள்வான்
தேனி மலைகிராமத்தில் வசிக்கும் காடர் இன மக்களுக்கும், கல்விக்கும் சம்பந்தம் இல்லாத நிலை. அந்த பகுதியில் பள்ளிக்கூடங்கள் இல்லை. பெண் குழந்தைகள் பெரிய மனுஷி ஆகிவிட்டால் திருமணம் செய்து வைத்துவிடுகிறார்கள். அந்த பெண் குழந்தைகள் கணவர் தவிர மற்ற ஆண்களின் முகத்தை பார்க்ககூடாது என்கிறார்கள். படிப்பறிவு இல்லாத காரணத்தால் அந்த மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். இந்த சூழ்நிலையில் ஊர் தலைவர் பேத்தியும், ஆரவ், ரம்யபாண்டியன் மகளுமான கிருத்திகாவுக்கு படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் வருகிறது. அவர் பெரிய மனுஷி ஆனதும், அவருக்கு திருமண ஏற்பாடுகள் நடக்க, நான் படித்தே தீர வேண்டும் என்ற வைராக்கியத்தில் மலையில் இருந்து தனி ஆளாக கீழே இறங்க, தேனி மாவட்ட கலெக்டர் அருள்நிதியை சந்திக்க வைக்கிறார். அப்போது பல தடைகள், துரத்தல்கள். அதிலிருந்து சிறுமி மீண்டாரா? கலெக்டர் அருள்நிதியால் அந்த மலை கிராமத்துக்கு கல்வி கிடைத்ததா? இதுதான் அருள்வான் படத்தின் கதை. கல்வியின் முக்கியத்துவம், பெண் குழந்தைகளின் முன்னேற்றம், மலைவாழ் மக்களின் நிலை ஆகியவற்றை ஒரு உணர்வு பூர்வமாக சொல்லும் கதையாக கொடுத்து இருக்கிறார் கணேஷ்விநாயகன்.

இவர் தேன் படத்தை இயக்கியவர் சிறுமி கிருத்திகாதான் இந்த படத்தின் கதைநாயகி. இவரை சுற்றிதான் கதை நகர்கிறது. கல்விக்காக ஏங்கும் மலை வாழ் சிறுமி கேரக்டரில் அவரும் நடிப்பில் மிரட்டியிருக்கிறார். அப்பா, அம்மா பாசம், கல்வி அறிவு இல்லாதததால் தாத்தாவை இழப்பது, திருமணம் வேண்டாம், படிப்புதான் வேணும் என பதறுவது, தனியாக தேனியில் சிக்கி திண்டாடுவது, கலெக்டர் சந்திப்பு, அவருடன் பாசம், கிளைமாக்சில் சில இடங்களில் என மனதில் நிற்கிறார். அவருக்கு தேசியவிருது கொடுத்து பாராட்டலாம். அடுத்ததாக கலெக்டர் கேரக்டரில் வரும் அருள்நிதியும் நல்ல தேர்வு. இடைவேளைக்குபின்னர்தான் அவர் வருகிறார். வழக்கமான படங்கள் போல ஹீரோயிசம், பாடல்காட்சி, சண்டைக்காட்சி, பில்டப், காதல் இல்லை. ஆனாலும், மலை வாழ் மக்களின் கல்விக்காக உதவும், அவர்கள் முன்னேற்றத்துக்காக துடிக்கும் இளம் கலெக்டர் வேடத்துக்கு பக்காவாக பொருந்தி இருக்கிறார். தனது சுயநலம் பற்றி யோசிக்காமல், ஒரு நல்ல கதைக்கு, நல்ல கேரக்டருக்கு கரம் கொடுத்த அருள்நிதியை பாராட்டலாம். அந்த மலை கிராமத்தில் பணியாற்ற அரசு ஆசிரியர்கள் தயங்குகிறார்கள் என செய்தி வர, நானே ஆசிரியர் ஆக இருந்து கலெக்டர் ஆனவன் என சொல்லிவிட்டு அவர் செய்கிற செயல் பிரமாதம். இளமை, முதுமை என இரண்டு கெட்அப்பில் மனதில் நிற்கிறார் அருள்நிதி. மலைவாழ் சிறுமியின் அப்பாவாக வரும் ஆரவ் அவ்வளவு சாப்ட் மகளுக்காக, மனைவிக்காக துடிப்பது, அந்த மக்களின் பாரம்பரிய நடனம் ஆடுவது, தேன் எடுக்க செல்வது என பல காட்சிகளில் நிறைவான நடிப்பை தருகிறார்.
அந்த கேரக்டராகவே மாறியிருக்கிறார் ரம்யாபாண்டியன். தனது வயதை மீறி, ஒரு டீன்ஏஜ் பெண்ணின் பாசக்கார அம்மாவாக நடித்து இருக்கிறார். பல இடங்களில் அவர் சிரிப்பும், மகள் மீதான பாசமும் படத்துக்கு பிளஸ் ஆக அமைகிறது. இவர்களை தவிர அரசு அதிகாரியாக வரும் விடிவி கணேஷ், பத்திரிகையாளராக வரும் காளிவெங்கட் நல்ல ரோலில் நடித்து இருக்கிறார்கள். மலைகிராமம், அந்த மக்களின் வாழ்க்கை, அவர்களின் சடங்குகள் சம்பந்தப்பட்ட சீன்களை அவ்வளவு அழகாக நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்து இருக்கிறார் சுகுமார். ஜி.வி.பிரகாஷ் பின்னணி இசை இன்னும் கூடுதல் பலம்.முதல்பாதி முழுக்க மலைப்பகுதியிலும், பிற்பாதி தேனியிலும் கிளைமாக்ஸ் மலை கிராமத்திலும் முடிகிறது. 1997ல் கதை நடக்கிறது. பல உண்மை சம்பவங்களின் தொகுப்பாக திரைக்கதை வந்துள்ளது. சில இடங்களில் வேகம் குறைவு. காடர் மொழி பேசுவதில்லை குழப்பம், சில சீன்கள் இழு, இழு என குறைகள் இருந்தாலும் பெண் குழந்தைகளின் முன்னேற்றத்தை, மலைகிராம மக்களின் உண்மை நிலையை, கல்வியின் முக்கியத்துவத்தை சொல்லி, அதற்கு தீர்வும் சொன்ன அருள்வான் பல விருதுகளுக்கு தகுதியானவன். கதையும், கேரக்டர்களும் பல ஆண்டுகள் மனதில் நிற்கும்
அன்பே டயானா
தமிழ் சினிமாவில் ஆண்டுக்கு ஏகப்பட்ட காதல் கதைகள் வருகிறது. பெரும்பாலான படங்கள் திருமணத்தில் அல்லது அது தொடர்பான காட்சியில்தான் முடிகிறது. காதலுக்கு எதிர்ப்பு, சண்டை, பிரச்னைகளுக்கு தீர்வு என்ன? என்பதை அதில் சொல்வார்கள் இயக்குனர்கள். பாரிஇளவழகனின் அன்பே டயானாவிலும் இதெல்லாம் இருக்கிறது. ஆனால், இதுவரை யாரும் சொல்ல கோணத்தில் கதையை நகர்த்தி இருக்கிறார். ஜமா படத்தை தொடர்ந்து பாரிஇளவழகனே இந்த படத்திலும் நடித்து இயக்கி இருக்கிறார். சென்னையில் இதுவரை பெரிதாக காண்பிக்கப்படாத பெரம்பூர் பின்னணியில் இந்த கதை நடக்கிறது. பெரம்பூரில் ரயில்பெட்டி தொழிற்சாலையில் வேலை செய்யும் சேத்தன் மகனாக வருகிறார். அம்மாவாக நடித் து இருப்பவர் ரோஜா. தெலுங்கு பேசும் சமூகத்தை சேர்ந்தவர், அந்த ஜாதி சங்கத்திலும் முக்கியமான ஆளாக இருக்கிறார். தனது மகன்கள் தனது சமூகத்தை பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என நினைக்கிறார். ஆனால், பாரி இளவழகனோ அதே ஏரியாவை சேர்ந்த ஆங்கிலோ இந்தியன் பெண் ரம்யாரங்கநாதனை காதலிக்கிறார். அவருக்கு பெங்களூர் தமிழ் பேசும் அங்கிருந்து வந்த பரிதாபங்கள் கோபி உதவுகிறார். அந்த காதல் சக்சஸ் ஆனதா? அதில் எத்தனை திருப்பங்கள் பிரச்னைகள் என்பதை காமெடி கலந்து சொல்லியிருக்கிறார்கள்.

கதைநாயகனாக நடித்த பாரி, அப்பாவிதனம் கலந்த காமெடி ரோலில் காதல் காட்சிகளில் முத்திரை பதித்து இருக்கிறார். அவருக்கும் அப்பா சேத்தன், அம்மா ரோஜா, தம்பி சுதர்சனுக்குமான சீன்கள் படத்தின் ஹைலைட். தானே ஹீரோ என்றாலும் ஓவர் டோஸ் ஆகாமல் நடிப்பில் சின்சியராக படம் பண்ணியிருக்கிறார். அவர் காதலியாக வரும் ரம்யா ஆங்கிலோ இந்தியன் கலாச்சாரத்தை நினைவுப்படுத்துகிறார். காதல் காட்சிகளில் அழகாக இருக்கிறார். இவரை விட அப்பாவாக வரும் சேத்தனும், அம்மாவாக வரும் ரோஜாவும் பல இடங்களில் அதளகளம் செய்து இருக்கிறார். காது கேட்காதவராக, மிஷின் மாட்டிக்கொண்டு, நண்பர்களுடன் அரட்டை அடித்துக்கொண்டு, இரவில் சரக்கு அடித்துவிட்டு பழைய காதலியை நினைத்து புலம்பிக்கொண்டு, ரோஜாவுக்கு பயந்தப்படி சிறப்பாக நடித்து இருக்கிறார் சேத்தன். ரோஜாவுக்கும் அவருக்குமான சீன்கள் கை தட்டல் வாங்குகிறது. 12 ஆண்டுகளுக்குபின் ரீ என்ட்ரி ஆகியிருக்கும் ரோஜா தெலுங்கு பே சும் சமூகத்தை சேர்ந்தவராக சற்றே ஜாதி வெறி பிடித்தவராக கலக்கியிருக்கிறார். அவரும் பல இடங்களில் கைதட்டல் வாங்குகிறார். தம்பியாக வரும் சுதர்சனும், அக்கா இஸ்ரத்பானுக்கும் நல்ல நடிப்பு.
பரிதாபங்கள் கோபி இந்த படம் திருப்புமுனையை தந்து இருக்கிறார். இனி பல படங்களில் காமெடியாக வருவார். பெங்களூர் தமிழ் பேசிக்கொண்டு அவர் அடிக்கிற லுாட்டி, கிளைமாக்சில் அவர் நடிக்கிற நடிப்பு, படத்தை கலகலப்பாக்குகிறது. அதேபோல் ஹீரோ மாமாவாக வருகிற செல்முருகனும் கிளைமாக்ஸ் உள்ளிட்ட இடங்களில் பட்டையை கிளப்பியிருக்கிறார். ஜாதிசங்க நிர்வாகிகள், நண்பர்கள், ஆங்கிலோ இந்தியன் சமூகம் என பலரையும் சரியான இடத்தில், சரியாக பயன்படுத்தி இருக்கிறார் இயக்குனர். ரோஜா சம்பந்தப்பட்ட சீன்களில் வசனங்களும், தெலுங்கு பாச சீன்களும் நச்.முதற்பாதி கொஞ்சம் மெதுவாக இருந்தாலும் இடைவேளைக்குபின் கதை சூடுபிடித்து, காமெடி, கலாட்டாக்களால் அதிர வைக்கிறது. கிளைமாக்சில் தமிழ், ஆங்கிலம், கன்னடம், மலையாளம் அனைத்து மொழிகளிலும் வந்து விளையாடுகிறது. அட, இப்படி கலகலப்பாக ஒரு காதல் படம் பார்த்து எவ்வளவு நாளாச்சு என்ற பீலிங்கை கொடுக்கிறது அன்பே டயானா
தி ஒடிஸி
உலகப்பெற்ற ஹோமரின் கிரேக்க காவியமான ஓடிசியை, பிரபலமான ஹாலிவுட் இயக்குனர் திரை மொழியில் சொல்லியிருக்கும் படம் தி ஓடிசி. 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கதையை, இன்றைய இளம்தலைமுறையினரும் ரசிக்கும்வகையில் ஐமாக்ஸ் பார்மட்டில், பிரமாண்டமாக, கலர்புல்லாக கொடுத்து இருக்கிறார்.
டிராய் அரசுக்கும், ஸ்பார்ட்டா அரசுக்கும் பகை. ஆனால், டிராய் கோட்டை மதில் சுவர்களை தாண்டி, ஸ்பார்ட்டா படைகளால் உள்ளே செ ல்ல முடியாத நிலை. இத்தாக்கா குறுநில மன்னனான ஓடிஸியஸ், ஸ்பார்டடாவுக்கு உதவ செல்கிறான். ஒரு மரக்குதிரையில் தனது வீரர்களுடன் ஒளிந்துகொண்டு டிராய் நகருக்குள் செல்கிறான். இரவில் அதிலிருந்து இறங்கி சண்டைபோட்டு, கோட்டை கதவை திறக்கிறான். ஸ்பார்ட்டா படைகள் உள்ளே வந்து டிராய் நகரை அழிக்கின்றன. அடுத்த சில ஆண்டுகள் அங்கே இருக்கும் ஒடிஸியஸ். ஒரு கட்டத்தில் தனது படைவீரர்களுடன் கடல் வழியாக தன் நாடு திரும்புகிறான். அப்போது கடலில் அவன் சந்திக்கும் பிரச்னைகள், சண்டைகள், வினோதங்கள் படத்தின் பெரும்பகுதி. அவன் நாடு திரும்பினானா என்பது ஒரு கதை. ஓடிஸியஸ் போருக்கு சென்றதால் அவன் நாட்டில் நிலவும் குழப்பங்கள், எதிரிகளால் அவன் மனைவி,மகன் படும் துயரங்கள். அவன் மனைவியை மறுமணம் செய்ய துடிக்கும் வில்லன், பழிவாங்க காத்திருக்கும் மகன் என இன்னொரு கதை செல்கிறது. நாடு திரும்பும் ஓடிஸியஸ் என்ன செய்கிறான் என்பது கிளைமாக்ஸ்.

இந்த கதையை ஏகப்பட்ட கிளைக்கதைகள், சம்பவங்கள், போர், சண்டை, திருப்பங்கள் கலந்து கொடுத்து அசத்தியிருக்கிறார் கிறிஸ்டோபர் நோலன். இதை சுவாரஸ்யமான திரைக்கதை, தகுந்த நடிகர்களை கொண்டு தனது பாணியில் கொடுத்து இருக்கிறார் இயக்குனர். ஓடிஸியர் போர்காட்சிகள், கடல் பயணங்கள், எதிர்கொள்ளும் சவால், ஒன்றை கண் கடல்தேவன் மகன், வீரர்களை பன்றிகளாக மாற்றும் சூனியக்காரி., இறந்தவர்களின் ஆன்மா, போர் பாதிப்பு, கிளைமாக்ஸ் சண்டை, ஸ்போர்ட்டா அரசனின் முடிவு என ஏகப்பட்ட ஆச்சரிய சீன்களால் நிரப்பி, நம்மை திகைக்க வை க்கிறார். அந்த கிளைமாக்ஸ் சண்டை செம ஹீரோயிசம், செம கைதட்டல். ஹீரோவாக நடித்த மேட் டாமன் கொஞ்சம் வயதான தோற்றத்தில் வந்தாலும் நடிப்பில், போர்டு, கடல் பயண காட்சிகளில் மிரட்டியிருக்கிறார். கடைசி அரை மணி நேரம் தனது தோற்றத்தை மறைத்துகொண்டு அவர் ஆடுகிற ஆட்டம், ராமாயணம் ஸ்டைலில் கிளைமாகஸ், அடுத்து நடக்கும் சண்டை பிரமாதம். அவர் மனைவியாக வருகிற அன்னா, மகனாக வருகிற டாம், வில்லன் ராபர்ட், அந்த கண் தெரியாத கிழவர், அரசியின் தோழி, ஸ்பார்ட்டா ராணி உட்பட பலரும் செம லுக், செம நடிப்பு.
கிட்டத்தட்ட 4 மணி நேரம் படம் ஓடினாலும், அடுத்தடுத்து வரும் திருப்பங்கள், ஆச்சரியங்கள், ஒளிப்பதிவு, இசை, சிஜி வொர்க், அறிமுகமாகும் நடிகர்கள் படத்தை இன்னும் வேகமாக நகர வைக்கிறார்கள். குறிப்பாக, கடல் பயணம், போர், சண்டைக்காட்சிகளை இப்படியெல்லாம் எடுக்க முடியுமா என்ற ஆச்சரியம் வருகிறது. அந்த நுாற்றாண்டு, அந்த கால கிரேக்கர்களின் வாழ்க்கையில் நாம் என்ட்ரியா உணர்வு வருகிறது. இது தவிர கணவன் மனைவி பாசம், அப்பா, மகன் அன்பு, போர் வீரன் பவர், தியாகம், போர் குறித்து அதன் பாதிப்பு கு றித்து கலங்குகிற இடங்கள், துரோகம், பழிவாங்கல் என ஏகப்பட்ட விஷயங்கள் மனதை தொடுகிறது. ஹாலிவுட் படம், சரித்திர கதை, பிரமாண்டம், பேண்டஸி, சொல்ல வரும் விஷயம் போன்ற காரணங்களால் ஒருவித பீலீங்கை, மனநிறைவை படம் கொடுக்கிறது. நீங்கள் வரலாற்று கதை விரும்பிகளாக, கிறிஸ்டோபர் நோலன் ரசிகர்களாக இருந்தாலும் இன்னும் படத்தை கொண்டாடுவீர்கள்
மீனாட்சிசுந்தரம், சிறப்பு செய்தியாளர்




