ஐபிஎல் போட்டியில் அறிமுகமான அர்ஜுன் டெண்டுல்கர் ! தந்தை சச்சின் உருக்கமான ட்விட்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் அறிமுகம் ஆகி விளையாடியுள்ள நிகழ்வு கிரிக்கெட் ரசிகர்களை…

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் அறிமுகம் ஆகி விளையாடியுள்ள நிகழ்வு கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் தன் மகன் ஐபிஎல்-லில் முதல் முறையாக அறிமுகமாகி விளையாட துவங்கியது குறித்து சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்த உருக்கமான ட்விட்டும் தற்போது வைரலாகி வருகிறது.

நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 31ம் தேதி துவங்கி தற்போதும் தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த முறை சென்ற ஆண்டு போல் இல்லாமல் எல்லா அணிகளுமே மாறி மாறி வெற்றிகளை பெற்று வருவதோடு, முதல் நான்கு இடத்தை பிடிப்பதில் கடும் போட்டி நிலவி வருகிறது. அந்த வகையில், நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையிலான ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் மற்றொரு கூடுதல் சிறப்பு என்னவென்றால், ஐபிஎல் தொடரில் முதல்முறையாக சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் அறிமுகமாகி விளையாடிய முதல் போட்டி இதுதான். இதனால் சச்சின் மகன் விளையாடுகிறார் என்பதாலேயே, இந்த போட்டியை காண பெரும்பாலான ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் ஸ்டேடியத்தில் குவிந்திருந்தனர்.

23 வயதாகும் அர்ஜுன் டெண்டுல்கர் கடந்த 2018-ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் யு-19 இந்திய அணிக்காக அறிமுகமாகி பலரது கவனத்தை பெற்றவர் ஆவார். பிறகு கடந்த 2021-ம் ஆண்டிலேயே ஐபிஎல் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி இவரை வாங்கி இருந்த போதிலும், நேற்றைய போட்டியில் தான் முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அவர் களம் இறங்கினார். இந்தப் போட்டியை காண சச்சின் டெண்டுல்கர், அவரது மனைவி அஞ்சலி, மகள் சாரா உள்ளிட்டோர் வந்திருந்த நிலையில், இரண்டு ஓவர்கள் பந்து வீச அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் சச்சின் மகன் அர்ஜுன் முதல் ஓவரில் வெறும் நான்கு ரன்கள் மட்டுமே கொடுத்திருந்த போதிலும், இரண்டாவது ஓவரில் ஒரு பவுண்டரி ஒரு சிக்ஸர் என 13 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.

அர்ஜுனின் பந்துவீச்சை கண்டு வேகத்தை மட்டும் கொஞ்சம் அதிகமாக வீசினால் அவர் பெரும் தாக்கத்தை கிரிக்கெட் உலகில் ஏற்படுத்துவார் என பல விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ள நிலையில், மகன் அர்ஜுனுக்கு சச்சின் அறிவுரை வழங்கும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை அவர் பகிர்ந்துள்ளார் அதில் “அர்ஜுன், இன்று நீ கிரிக்கெட் வீரராக உனது பயணத்தில் இன்னொரு முக்கியமான அடி எடுத்து வைத்துள்ளாய். உன் தந்தையாக, உன்னை நேசிக்கும், விளையாட்டின் மீது நாட்டம் கொண்ட ஒருவனாக, விளையாட்டிற்குத் தக்க மரியாதையைத் தொடர்ந்து அளிப்பாய், விளையாட்டும் உன்னை நேசிக்கும் என்று எனக்குத் தெரியும். நீ இங்கு வருவதற்கு மிகவும் கடினமாக உழைத்துள்ளாய். அதைத் தொடர்ந்து செய்வாய் என்று நான் நம்புகிறேன். இது ஒரு அழகான பயணத்தின் தொடக்கமாகும். ஆல் தி பெஸ்ட்!” என்று தெரிவித்திருந்தார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.