மாஸ்டர், கைதி, விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் அர்ஜுன் தாஸ். குறிப்பாக அவரின் குரல் அவருக்கு பலமாக அமைந்தது. அவரின் குரலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர். பின்னர், அவர் அநீதி, ரசவாதி போன்ற பல படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார். தொடர்ந்து, தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் பணியாற்றி வருகிறார். இதனிடையே, இவர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் ‘கான்சிட்டி’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த ஜூன் 26ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இப்படத்தை பவர்ஹவுஸ் நிறுவனத்தின் தயாரித்தது. இப்படத்தில் அர்ஜுன் தாஸ் உடன் இணைந்து, அன்னா பென் நாயகியாக நடித்திருந்தார். மேலும், இந்தப் படத்தில் வடிவுக்கரசி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சான் ரோல்டன் இசையமைத்திருந்தார். இப்படம் உலகளவில் ரூ. 5 கோடி வரை வசூலித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், ‘கான் சிட்டி’ திரைப்படம் இன்று நெட்பிளிக்ஸ் ஓடிடியில் தமிழ் உள்பட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது.




