அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான வாதங்கள் நிறைவு – செப்.20 ம் தேதி தீர்ப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான வாதங்கள் நிறைவடைந்த  நிலையில் வரும் 20-ந் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி அல்லி தெரிவித்துள்ளார்.  சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட…

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான வாதங்கள் நிறைவடைந்த  நிலையில் வரும் 20-ந் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி அல்லி தெரிவித்துள்ளார். 

சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை விசாரிப்பதில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் ஆகியவற்றிற்கு இடையே தெளிவில்லாத சூழல் நிலவியது.

இதுதொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டப்படி, சிறப்பு நீதிமன்றமாக அறிவிக்கப்பட்டுள்ள முதன்மை அமர்வு நீதிமன்றம் தான், ஜாமீன் மனு மட்டுமல்லாமல், முழு வழக்கையும் விசாரிக்க வேண்டுமென உத்தரவிட்டது. இதையடுத்து, வரும் வெள்ளிக்கிழமைக்குள் அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை செப். 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தார்.

அதன் படி ஜாமீன் மனு மீதான் விசாரணை இன்று விசாரணைக்கு வந்தது. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி மனுவை விசாரித்தார். அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதங்களை முன்வைத்தார். ”செந்தில் பாலாஜி மீது கூறப்பட்டுள்ள சட்ட விரோத பண பரிமாற்ற குற்றச்சாட்டு 9 ஆண்டுகள் முன்பானது

சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்ததற்கான எந்த ஆதாரங்களும் இல்லை. இந்த ஒன்பது ஆண்டுகளில் வருமான வரியை தாக்கல் செய்துள்ளேன். சட்ட விரோதமாக பண பரிமாற்றம் செய்திருந்தால் வருமான வரி செலுத்தியது எப்படி ஏற்கப்பட்டிருக்கும்?. வழக்கு பதியப்பட்ட ஆண்டிலிருந்து தற்போது வரை வருமான வரி செலுத்தியது வருமான வரித்துறையால் ஏற்கப்பட்டுள்ளது. சட்ட விரோதமாக பண பரிமாற்றம் நடந்ததாக எந்த சாட்சிகளும் கூறவில்லை “ என முன்வைத்தார்.

அமலாக்கத்துறை சார்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் வாதங்களை முன்வைத்தார். தனது தரப்பு வாதத்தில் “ சட்ட விரோத பண பரிமாற்றம் நடந்ததற்கான முகாந்திரம் உள்ளதால் தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. செந்தில் பாலாஜி மீதான வழக்கு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்ற வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்கனவே நிராகரித்துள்ளது.

இந்த முறைகேடு இடைத்தாரர்கள் மூலம் நடந்துள்ளது. பணம் கொடுத்த சிலருக்கு வேலை கிடைத்துள்ளது. சிலருக்கு வேலை கிடைக்கவில்லை. வருமான வரி கணக்கை வருமான வரித்துறை ஏற்றுக்கொண்டதாலேயே அது சட்டப்பூர்வமான பணம் ஆகாது என்ற தீர்ப்புகள் உள்ளன.

வருமான வரி கணக்கு ஏற்றுக்கொள்ப்பட்டதால் தவறு செய்யவில்லை என்றில்லை. விசாரணையில் தான் அது தெரியவரும். குற்றச்சாட்டுக்கு உள்ளான நபர் தான், தன் மீதான குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு இடமின்றி தாம் தவறு செய்யவில்லை நிரூபிக்க வேண்டும்

வேலை வேண்டும் எனக்கோரி பணம் கொடுப்பவர்கள் வங்கி மூலம் பணம் கொடுக்கமாட்டார்கள். அமலாக்கத்துறை விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால் ஜாமீன் வேண்டும் என கோர முடியாது. IPC வழக்குகளுக்கு வேண்டுமானால் அது பொருந்தும். அமலாக்கத்துறை சட்டம் வேறு.

அமைச்சர் செந்தில் பாலாஜி இன்னும் அமைச்சராக இருக்கிறார். சமூகத்தில் சக்தி வாய்ந்த நபராக உள்ளார். எனவே சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது. ஜாமீன் வழங்க கூடாது ஜாமீன் கோருவதற்கு உடல் நிலை ஒரு காரணம் அல்ல.

அமலாகக்த்துறை பதிவு செய்த வழக்கில் இரண்டரை ஆண்டுகளாக சிறையில் உள்ளவர்களும் உள்ளனர். செந்தில் பாலாஜியின் எலக்ட்ரானிக் பொருட்களை சட்ட விரோதமாக வைத்திருந்ததாக கூறுவது தவறு. ஆவணங்களை சேகரிக்கும் நோக்கிலேயே எலக்ட்ரானிக் பொருட்களை அமலாக்கத்துறையால் கைப்பற்றப்பட்டது. எனவே செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் “ என அமலாக்கத்துறை வாதங்களை முன்வைத்தது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி  ஜாமீன் மனு கோரிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனு மீது வரும் 20ம் தேதி தீர்ப்பு வழங்குவதாக உத்தரவிட்டார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.