மது போதையில் பிரியாணி கடையில் ஏற்பட்ட தகராறு : பட்டதாரி இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு..!

மது போதையில் பிரியாணி கடையில் ஏற்பட்ட தகராறில் பட்டதாரி இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்டார். சம்பவம் தொடர்பாக மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்து விசாரணை கொண்டு வருகின்றனர். சென்னை அம்பத்தூரையடுத்த கொரட்டூர் ரெட்டி…

மது போதையில் பிரியாணி கடையில் ஏற்பட்ட தகராறில் பட்டதாரி இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்டார். சம்பவம் தொடர்பாக மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்து விசாரணை கொண்டு வருகின்றனர்.

சென்னை அம்பத்தூரையடுத்த கொரட்டூர் ரெட்டி தெருவை சேர்ந்தவர் பாலசந்திரன் (22). பட்டதாரியான இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று இரவு மண்ணூர்பேட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு மதுபான கடையில் தனது நண்பர்களுடன் மது குடித்துவிட்டு அருகில் இருந்த பிரியாணி கடையில் பிரியாணி ஆர்டர் செய்துவிட்டு மது போதையில் காத்துக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் அதே கடைக்கு மது போதையில் வந்த மர்ம நபர்களுக்கும் பாலச்சந்திரனுக்கும் வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனே பாலசந்திரன்
தனது ஹெல்மெட்டினால் எதிர்த்தரப்பை தாக்கியுள்ளார். மாறி மாறி ஒருவர் தாக்கியுள்ளனர். இதனைதொடர்ந்து மர்ம நபர்கள் மூன்று பேர் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் பாலசந்திரனின் தலை மற்றும் காதில் வெட்டியுள்ளனர்.

இதில் நிலை குலைந்த பாலா அங்கேயே சரிந்தார். உடனே அந்த கும்பல் தாங்கள் வந்த இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்துறையினர் பாலசந்திரனை 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் பாலா மருத்துவமனை செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்துறையினர் சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். முன் விரோதம் காரணமாக இந்த கொலை செய்யப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அம்பத்தூர் தனிப்பிடி போலீசார் அஜித், வெங்கட், சங்கர் என்ற மூன்று வாலிபர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.